விஜய் படத்தை காண்பித்து பக்தர்களிடம் ஆதரவு கேட்டு வீடியோ எடுத்த தவெகவினர்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்துக்குள் தடையை மீறி வீடியோ எடுத்தது தொடர்பாக தவெகவினர் மீது, கோயில் உள்துறைக் கண்காணிப்பாளர் போலீஸில் புகார் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கும், வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயிலில் தவெக தலைவர் விஜய் புகைப்படத்துடன் சிலர் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டிருந்தனர்.
அந்த வீடியோவில், ‘தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரோகரா. 2026-ல் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அறநிலையத் துறையை கையில் எடுப்போம். கோயிலில் இந்த மாதிரி வரிசை எல்லாம் இருக்காது. அனைவருக்கும் பாஸ் தான்” என்று பிரச்சாரம் செய்திருந்தனர். இந்தக் காட்சிகள் இணையதளத்தில் பரவின.
இதையடுத்து, கோயில் உள்துறை கண்காணிப்பாளர் விவேக், இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில் “இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஒரு நபர் பதிவிட்டுள்ள காணொலியில் ஓர் அரசியல் கட்சி பற்றி வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்யும் வகையிலும், அரசியல் கோஷங்களை உரக்க முழங்கியும் பதிவிட்டுள்ளார்.
இந்த செயல் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தெளிவான உத்தரவுகளை அறிந்தும், திட்டமிட்டு மீறிய குற்றமாகும். மேலும், இந்த வீடியோவில் இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராகவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடனும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி, அதைப் பதிவிட்டுள்ளார். இது சுப்பிரமணிய சுவாமி கோயில் போன்ற புனித தலத்தின் ஆன்மிகச் சூழல், வழிபாட்டு ஒழுங்கு மற்றும் பொது அமைதியை குலைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட செயலாகும்.
இந்த செயல் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, மேற்கண்ட வீடியோவை பதிவிட்ட நபர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து அகற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.