சென்னை: “முதல்வர் விஜய்யின் அழகிய முகத்தைப் பார்க்க சட்டப்பேரவையில் தனி ஸ்கிரீன் வேண்டும்” என தவெக எம்.எல்.ஏ. அன்பன் கல்லாணை கோரிக்கை வைத்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
சட்டப்பேரவையில் அறநிலையத் துறை, சட்டத்துறை உள்ளிட்ட துறைகள் மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. பல்வேறு அறிவிப்புகள், தகவல்களுக்கு மத்தியில், மதுரை வடக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ அன்பன் கல்லாணை பேசுகையில், “தலைவரை சிறுவயதில் இருந்து எங்கிருந்தாலும் ஓடோடி பார்த்தோம்.
இன்று எங்கள் அருகிலேயே அமரும் பாக்கியத்தை கொடுத்திருக்கிறார். ஆனால், அதில் ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால், அவருடைய முகத்தை எங்களால் கண்டு களிக்க முடியவில்லை. சாமி அமைச்சர் என அண்ணன் சொன்னதை, முதல்வர் விஜய் கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்ததைக் கூட மாலையில் வீட்டுக்குச் சென்றுதான் டிவியில் பார்த்தோம்.
எதிர்க்கட்சிகள் தனது அரசைப் பற்றி காமெடியாக சொன்னால் கூட, அதை கேட்டு சிரிக்கும் தலைவர். அண்ணா வழி வந்த எங்கள் அண்ணாவின் அழகிய முகத்தை பார்ப்பதற்கு பேரவையில் தனி ஸ்கிரீன் ஏற்பாடு செய்து தரவேண்டும் என என்னுடைய தனிப்பட்ட கோரிக்கையை முன்வைக்கிறேன்” என்றார்.