“ஊடக வெளிச்சத்துக்காக ராகுல் காந்தி நாடகம்” - ஜே.பி.நட்டா விமர்சனம்

“ஊடக வெளிச்சத்துக்காக ராகுல் காந்தி நாடகம்” - ஜே.பி.நட்டா விமர்சனம்
Updated on
1 min read

புதுடெல்லி: தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே, கேமராவை மையமாகக் கொண்ட நாடகத்தை ராகுல் காந்தி நடத்துகிறார் என்றும், ஜூலை 20 சம்பவத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே குழுவை அமைத்துள்ளதை நாடு அறியும் என்றும் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜூலை 20 அன்று டெல்லியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற சாஹில் லோச்சாப் என்ற இளைஞர் மீது நடத்தப்பட்ட பெல்லட் குண்டு தாக்குதலில் அவரது ஒரு கண் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தி டெல்லியில் நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் துணை ஆணையர் அலுவலகம் முன்பாக சாஹில் லோச்சாப் உடன் இணைந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

ராகுல் காந்தியின் இந்தப் போராட்டம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜே.பி.நட்டா, "ராகுல் காந்தியின் இன்றைய போராட்டம் மாணவர்களுக்கானதோ, நீதிக்கானதோ அல்ல. ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான ராகுல் காந்தியின் நாடகம் இது.

ஜூலை 20-ஆம் தேதி நடந்த சம்பவம் குறித்து ஆராய முன்னாள் நீதிபதி தலைமையில் ஐந்து பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருப்பது நாட்டுக்கே தெரியும்.

நாட்டின் உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தை விசாரித்து வரும் நிலையில், காவல் நிலையத்துக்கு வெளியே கேமராக்களுக்கு முன்னால் அமர்வதன் மூலம் ராகுல் காந்தி எதை நிரூபிக்க விரும்புகிறார்?

நாட்டின் நீதித் துறையின் மீது எதிர்க்கட்சித் தலைவருக்கு நம்பிக்கை இல்லையா? உண்மை என்னவென்றால், ராகுல் காந்தி தன்னைத் தலைப்புச் செய்திகளில் தக்கவைத்துக் கொள்ளவே இந்த 'கேமராவை மையமாகக் கொண்ட' நாடகத்தை நடத்துகிறார்.

இந்த நாடகம் நடத்தப்படும் காலத்தைக் கருத்தில் கொண்டால், 'வந்தே மாதரம்' விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது என்பதை நாம் உணரலாம். தேசியப் பாடலுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை குறித்து காங்கிரஸ் கட்சியிடம் மக்கள் விளக்கம் கோருகின்றனர்.

தனது இந்த தேசவிரோத முகத்தை மறைக்கவும், தனக்கு ஏற்பட்ட பெரும் தர்மசங்கடத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவும், ராகுல் காந்தி அவசர அவசரமாக இந்த புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்," என்று விமர்சித்துள்ளார்.

“ஊடக வெளிச்சத்துக்காக ராகுல் காந்தி நாடகம்” - ஜே.பி.நட்டா விமர்சனம்
“எல்லை பாதுகாப்பில் அலட்சியம் காட்டியவர் மம்தா பானர்ஜி” - அமித் ஷா சாடல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in