கள்ளக்குறிச்சி: குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கில், கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி எம்எல்ஏ அருள் விக்னேஷ் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியதாக தகவல் வெளியாயின. கடந்த ஜூலை மாதமே இச்சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டு விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் அருள் விக்னேஷ் எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்தது. 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன், வழக்கை விசாரித்து, விசாரணை அதிகாரிகளை நியமித்து, அறிக்கைத் தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டார்.
இதனிடையே கடந்த 23-ம் தேதி பாதிக்கப்பட்ட அதிகாரியிடம், மாவட்ட எஸ்பி ஷானாஸ் புகாரைப் பெற்றார். இந்தப் புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஐஜி காமினி மேற்பார்வையில், திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், பாதிக்கப்பட்ட அதிகாரியின் தனி உதவியாளர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் விக்னேஷ் எம்எல்ஏவின் வீட்டுக்கு சென்று சம்மனை வழங்கினார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட அதிகாரி மற்றும் அவரது கணவரிடமும் எஸ்பி சிருஷ்டி சிங் விசாரணை நடத்தினார். விசாரணையைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் எண்-1-ல் பாதிக்கப்பட்ட அதிகாரியும் அவரது கணவரும் வாக்குமூலம் அளித்தனர்.
இந்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து நேற்று முன்தினமே எம்எல்ஏ கைது செய்யப்படுவார் என்ற தகவல்கள் வெளியாயின. இருப்பினும் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை எஸ்பி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீஸார், கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள எம்எல்ஏ அருள் விக்னேஷ் இல்லத்துக்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அங்கிருந்து அவரை, தியாகதுருகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதன் பின்னர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நீதிமன்றத்தில் ரகசிய விசாரணை
குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்எல்ஏவுக்கு எதிராக அதிமுக பெண் வழக்கறிஞர் திரிசூலி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ‘‘உதயநிதி எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை’’ என்றார்.
அதற்கு நீதிபதி, ‘‘பாதிக்கப்பட்ட அதிகாரி, குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏ என இருவரையும் உதயநிதி தனது பேட்டியில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இது விதிமீறல்தானே. யாராக இருந்தாலும் விதிமீறலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளேன்’’ என்றார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரி விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த வழக்கு ரகசியமாக மூடிய அறையில் விசாரிக்கப்படும் என்று கூறி, வழக்குக்கு சம்பந்தம் இல்லாத மற்ற வழக்கறிஞர்களை வெளியேற உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை டிசம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.