சென்னை: தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநரை கண்டித்து, தவெக தொண்டர்கள் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லை.
இதனால், தவெகவால் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், திமுக கூட்டணியில்இருந்து விலகி காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது.
அக்கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளதால் தவெக எம்எல்ஏக்களின் பலம் 113 ஆக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து விஜய் தமிழக ஆளுநரை இரண்டு முறை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
மேலும், பதவி ஏற்புக்கு பின் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறினார். ஆனால், ஆளுநர் இதுவரையில் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. மேலும், திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து ஆட்சி பொறுப்புக்கு வர உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில், விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநரை கண்டித்து தவெக தொண்டர் ஒருவர் ஆளுநர் மாளிகை முன்பு நேற்று சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டார்.
விஜய் முதல்வராவதை தடுக்காதே, மறுக்காதே... மறுக்காதே... மக்கள் தீர்ப்பை மறுக்காதே, தடுக்காதே... தடுக்காதே விஜய் முதல்வராவதை தடுக்காதே என சங்கு ஊதி ஆக்ரோஷமாக முழக்கமிட்டார்.
இதையடுத்து, அங்கிருந்த போலீஸார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதையடுத்து, விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க கோரி தவெக தொண்டர் ஒருவர் ஆளுநர் மாளிகை முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்றார். அவரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இது ஒருபுறம் இருக்க விஜய்க்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வலியுறுத்தி கையில் பதாகையை ஏந்தி தவெக தொண்டர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும், ஒரு பெண், ஆளுநர் மாளிகை முன்பு வந்து, ‘நாடே அழுகிறது... விஜய் முதல்வராக வர வேண்டும்’ என கோஷமிட்டவாறு தவெக கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபோன்ற நிகழ்வுகளால் ஆளுநர் மாளிகை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.