தமிழகம்

‘என் தங்கச்சி ஜட்ஜ்... கமிஷ்னர் அமல்ராஜை தெரியும்’ - போதையில் போலிஸை மிரட்டிய தவெக பிரமுகர்

செய்திப்பிரிவு

சென்னை: "என் தங்கச்சி ஜட்ஜ்... கமிஷனரை எனக்கு பிறந்ததிலிருந்தே தெரியும்" எனக் கூறி, நள்ளிரவில் போலீஸாரை மிரட்டும் வகையில் தவெக பிரமுகர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான நாய்கள் கருத்தடை மையம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், அத்துமீறி இந்த மையத்துக்குள் நுழைந்த ஒருவர். அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் தவெக கட்சியின் சின்னம் பொறித்த டி-சர்ட் அணிந்திருந்தார். மேலும், அதிகப்படியான மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், அந்த நபரை தடுத்து நிறுத்தி நள்ளிரவில் இங்கு ஏன் வந்தீர்கள் என விசாரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், போலீஸாரை ஒருமையில் பேசி மிரட்டல் விடுக்கத் தொடங்கினார்.

"என் பெயர் ரமேஷ் முத்து ராமன். நான் ஒரு வழக்கறிஞர். என் தங்கச்சி ஜட்ஜ் ஆக இருக்கிறார். சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜை எனக்கு பிறந்ததிலிருந்தே நன்றாகத் தெரியும். ஒரு வழக்கறிஞரையும், ஜட்ஜ் ஆகப்போறவனையும் அசிங்கப்படுத்துகிறீர்களா? நாயைக் காப்பாற்ற வக்கு இல்லாத போலீஸ் நீங்களெல்லாம். எங்கள் முதல்வர் விஜய் 25 நாய்கள் வளர்க்கிறார். என் கருப்புக் கோட்டின் மீது கை வைத்தால், அடுத்த நிமிடமே 10,000 வழக்கறிஞர்களை இங்கு வரவழைப்பேன். அப்புறம் நிலைமையே வேறு மாதிரி ஆகிவிடும்" என்று ஆவேசமாக மிரட்டல் விடுத்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது, பொது மக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT