தமிழகம்

“தவெக எங்களின் இரண்டாவது சாய்ஸ்” - புயல் கிளப்பும் புதுச்சேரி ரங்கசாமி

என்​.ஆர்​.​காங்​கிரஸ் - பாஜக கூட்​டணி உடைகிறது?

செ.ஞானபிரகாஷ்

புதுச்​சேரி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ் - பாஜக கூட்​டணி இந்​தத் தேர்​தலுக்​கும் தொடருமா தொட​ராதா என சந்​தேகங்​கள் எழுப்​பப்​பட்ட நிலை​யில் கூட்​டணி தொடர்​வதை கடந்த மாதம் காரைக்​கால் வந்த அமித் ஷாவை சந்​தித்த பின்பு தெளிவுபடுத்​தி​னார் ரங்​க​சாமி.

இதைத் தொடர்ந்து புதுச்​சேரிக்​கான பாஜக தேர்​தல் பொறுப்​பாள​ரான மத்​திய அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா கடந்த வாரம் புதுச்​சேரி வந்து முதல்​வர் ரங்​க​சாமி​யுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அதைத் தொடர்ந்து என்​.ஆர்​.​காங்​கிரஸுக்கு 16 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டன. “மீத​முள்ள 14 தொகு​தி​களை பாஜக, அதி​முக, லஜக பிரித்​துக் கொள்​வோம்” என பாஜக மேலிட பொறுப்​பாளர் நிர்​மல் குமார் சுரானா தெரி​வித்​தார். இந்த ஒதுக்​கீட்​டில் தங்​களுக்கு இடமளிக்​கப்​ப​டாத​தால் 30 தொகு​தி​களி​லும் பாமக தனித்து போட்​டி​யிடு​வ​தாக அறி​வித்​தது.

          

இந்​நிலை​யில், லாட்​டரி அதிபர் ஜோஸ் சார்​லஸ் மார்ட்​டினின் கட்​சி​யான லஜக-வை கூட்​ட​ணி​யில் சேர்க்​கக் கூடாது என ரங்​க​சாமி போர்க்​கொடி தூக்​கி​னார். ஜோஸ் சார்​லஸ் அரசி​யல் கட்சி தொடங்​கு​வதற்கு முன்பு ரங்​க​சாமி அரசின் செயல்​பாடு​களை கடுமை​யாக விமர்​சித்து வந்​தார்.

இதை மனதில் வைத்தே அவரைக் கூட்​ட​ணிக்​குள் சேர்க்க கேட் போட்​டார் ரங்​க​சாமி. இந்த நிலை​யில் நேற்று முன் தினம் மாலை மன்​சுக் மாண்​ட​வியா ரங்​க​சாமியை சந்​திப்​ப​தற்​காக தனி விமானத்​தில் புதுச்​சேரிக்கு வந்​தார். வந்​தவர், இரவு 11 மணியை தாண்​டி​யும் ரங்​க​சாமியை சந்​திப்​ப​தற்​காக காத்​திருந்​தார்.

இந்த நிலை​யில், ஏனாமில் இருந்து திரும்​பிய ரங்​க​சாமி, அப்பா பைத்​தி​ய​சாமி கோயி​லி்ல் வழி​பாடு செய்​தார். அப்​போது அங்கு வந்த கட்சி நிர்​வாகி​கள், லஜக-வை கூட்​ட​ணி​யில் சேர்த்​தால் பாஜக கூட்​டணி வேண்​டாம்’ என்று தெரி​வித்​த​தாக தெரி​கிறது. இதனால் மாண்​ட​வி​யாவை சந்​திக்​காமலேயே வீட்​டுக்கு திரும்​பி​ விட்​டார் ரங்​க​சாமி.

அவருக்​குப் பதிலாக என்​.ஆர்​.​காங்​கிரஸ் தரப்​பில் அமைச்​சர் லட்​சுமி நாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறு​முகம், கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் ஜெய​பால் உள்​ளிட்​டோர் மாண்ட​வி​யாவை சந்​தித்து தங்​களின் நிலைப்​பாட்டை தெளிவுபடுத்​தினர். இதையடுத்து இரு தரப்​புக்​கும் இடை​யில் கார​சார விவாதம் நடை​பெற்​றது. முடி​வாக, “காலை​யில் மீண்​டும் பேசுவோம்” என்று சொல்​லி​விட்டு அனை​வ​ரும் கலைந்​தனர்.

இதையடுத்து நேற்று காலை 9 மணி​யில் இருந்தே என்​.ஆர்​.​காங்​கிரஸ் தரப்​புக்​காக பாஜக-​வினர் காத்​திருந்​தனர். ஆனால், இரண்டு மணி நேரம் ஆகி​யும் யாரும் பேச்​சு​வார்த்​தைக்கு வரவில்​லை. இதையடுத்​து, பாஜக தலை​மை​யின் அழைப்​பின் பேரில் மன்​சுக் மாண்​ட​வி​யா, புதுச்​சேரி உள்​துறை அமைச்​சர் நமச்​சி​வா​யம், பேர​வைத்​தலை​வர் செல்​வம், பாஜக மாநிலத் தலை​வர் வி.பி.​ரா​மலிங்​கம் ஆகி​யோர் தனி விமானத்​தில் டெல்லி புறப்​பட்​டனர். டெல்​லி​யில், பாஜக வேட்​பாளர் பட்​டியலை மேலிடத்​திடம் சமர்ப்​பித்த நிர்​வாகி​கள், ரங்​க​சாமி​யின் நிபந்​தனையை​யும் தெரி​வித்​தனர்.

இதையடுத்து ரங்​க​சாமி​யின் கோரிக்​கையை ஏற்​றுக் கொள்​ளும் பொருட்டு ஜோஸ் சார்​லஸ் தரப்​போடு பாஜக தரப்​பில் இருந்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​ட​தாகச் சொல்​கி​றார்​கள். இதையடுத்​து, 30 தொகு​தி​களி​லும் தனித்து போட்​டி​யிடும் முடிவுக்கு லஜக வந்​த​தாகத் தெரி​கிறது. இதனிடையே, பாஜக தரப்​பில் பிடி​வாதம் காட்​டு​வ​தால் கூட்​ட​ணியை முறித்​துக் கொண்டு தவெக-வுடன் ரங்​க​சாமி கைகோக்​கப் போவ​தாக நேற்று சேனல்​களில் பிரேக்​கிங் நியூஸ் ஓடியது.

அதற்கு இடமளிக்​காத வகை​யில் தனது நிலை​யில் இருந்து இறங்கி வந்து ரங்​க​சாமி உடனான கூட்​ட​ணியை உறு​திப்​படுத்தி இருக்​கிறது பாஜக. இருந்​தா​லும் இந்த விஷ​யத்​தில் ரங்​க​சாமி இறு​தி​யில் என்ன முடி​வெடுப்​பார் என்​பது அவர் வணங்​கும் அந்த அப்பா பைத்​தி​யம் சாமிக்​குத்​தான் தெரி​யும்.

இரண்​டாவது சாய்ஸ்: என்​.ஆர்​.​காங்​கிரஸ் கட்​சி​யின் அடுத்த கட்ட செயல்​பாடு குறித்து அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் ஜெய​பாலிடம் கேட்​டதற்​கு, "லஜக-வை கூட்​ட​ணி​யில் சேர்க்க வேண்​டாம் என்று தெரி​வித்​தோம். அதை கட்சி மேலிடத்​தில் கேட்டு வரு​வ​தாகச் சொல்​லித்​தான் பாஜக-​வினர் டெல்லி சென்​றுள்​ளனர். நம்மை ‘வேண்​டாம்’ என்று முடி​வெடுத்​து, பாஜக முதல்​வ​ரா​னாலும் வாழ்த்​துகள்’ என்று தான் முதல்​வர் ரங்​க​சாமி சொல்​கி​றார். அப்​படி ஒரு நிலை வந்​தால் மக்​கள் தான் முடி​வெடுக்க வேண்​டும்.

மத்​திய அமைச்​சருடன் நடந்த பேச்​சு​வார்த்​தை​யில் எங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட 16 தொகு​தி​களுக்​கும் வேட்​பாளர்​களைத் தயார் செய்​துள்​ளோம். வேட்பு மனு தாக்​கலுக்கு தயா​ராக இருக்​கி​றோம். வெள்​ளிக்​கிழமை மனு தாக்​கல் செய்​வோம். பேச்​சு​வார்த்​தை​யில் சுமுக​மான முடிவு ஏற்​பட்​டால் என்​டிஏ கூட்​டணி தொடரும். இதில் பாஜக-வுக்கு விருப்​பம் இல்​லா​விட்​டால், தவெக-வுடன் எங்​கள் தலை​வர் கூட்​டணி செல்​வார் என எதிர்​பார்க்​கி​றோம்.

பாஜக மறுத்​தால் தான் தவெக-வுடன் பேசுவோம். தவெக கூட்​டணி அமைத்​தால் என்​.ஆர்​.​காங்​கிரஸ் 20 இடங்​களில் போட்​டி​யிடும். பாஜக-வுடன் இருக்​கவே எங்​களுக்கு விருப்​பம். ஆனாலும் அவர்​கள் எடுக்​கும் முடி​வின்​படி எங்​களின் அடுத்​தகட்ட செயல்​பாடு இருக்​கும்" என்​றார்​.

SCROLL FOR NEXT