உள்ளாட்சித் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பலத்துடன் மகுடம் சூட தவெக அதிரடி வியூகம் வகுத்து வருகிறது. அதற்கேற்ப, மற்ற கட்சிகளில் செல்வாக்குடன் இருக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்களைத் தன் பக்கம் இழுக்க ‘வலை’ வீசி வருகிறது. பெரும்பாலும் இந்த வலையில் அதிமுகவினர்தான் சிக்கி வருகின்றனர்.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழக அரசியலில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆளும் தரப்பின் அசுர வளர்ச்சியைக் கண்டு அதிமுக, திமுக உள்ளிட்டஎதிர்க்கட்சிகளிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள்மற்றும் மாவட்டச் செயலாளர்கள் என முக்கியப் புள்ளிகள் தங்கள் ஆதரவாளர்களுடன் தவெக நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், ஏற்கெனவே, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர். சிவபதி உள்ளிடோர் தவெகவில் இணைந்தனர். நேற்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் பாலகங்கா, முன்னாள் எம்.பி. வனரோஜா, முன்னாள் நெல்லை மேயர் புவனேஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் தவெகவில் இணைந்தனர்.
இந்தத் திடீர் அணித் தாவல்கள், தமிழகத்தின் பாரம்பரியக் கட்சிகளின் அடித்தளத்தையே அசைத்துப் பார்த்துள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தாலும், அடுத்ததாக நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் ‘தனிப் பெரும்பான்மை’ பலத்துடன் வெற்றிக்கொடியை நாட்ட வேண்டும் என்பதில் தவெக தலைமை உறுதியாக உள்ளது.
இதற்காக இப்போதே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ள தவெக, மற்ற கட்சிகளில் செல்வாக்குடன் இருக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்களைத் தன் பக்கம் இழுக்க ‘வலை’ வீசி வருகிறது. பெரும்பாலும் இந்த வலையில் அதிமுகவினர்தான் சிக்கி வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மற்ற கட்சிகளின் அதிருப்தி நிர்வாகிகளைக் குறிவைத்து ‘ரகசிய ஆபரேஷன்’ தீவிரமடைந்துள்ளது. அடிமட்டத் தொண்டர்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள உள்ளூர் செல்வாக்கு மிக்க நபர்களை வளைப்பதன் மூலம், தேர்தலை மிக எளிதாக எதிர்கொள்ள முடியும் என தவெக வியூகம் வகுத்துள்ளது.
அந்தவகையில், பல முன்னணித்தலைவர்களுடன் ரகசியப் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. பனையூரில் இதுதொடர்பான நடவடிக்கைகளில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளார்.
நகரப் பகுதிகளைத் தவிர்த்து, கிராமப்புறங்களில் முற்றிலும் மாறுபட்ட ஒரு உத்தியைத் தவெக கையில் எடுத்துள்ளது. அங்கு கொள்கைகளை விட மக்களின் அன்றாடத் தேவைகளான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு மற்றும் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவற்றில் நிலவும் குறைகளைச் சுட்டிக்காட்டி, ‘சமூகத் தணிக்கை’ என்ற பெயரில் களப்பணியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த அதிரடி நகர்வுகள் மூலம் உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களைச் சொந்த பலத்தில் கைப்பற்றி, தவெக ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை மீண்டும் நிரூபிக்க அக்கட்சித்தலைமை மும்முரமாகச் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தவெக வட்டாரத்தில் விசாரித்த போது, “அதிகாரத்தின் அடித்தளமான உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றினால் மட்டுமே, மாநில அளவிலான இலக்கை நோக்கிய பயணத்தைச் செம்மையாக முன்னெடுக்க முடியும் என்பதில் தவெக உறுதியாக உள்ளது. குறிப்பாக, சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மக்கள் செல்வாக்கு மிக்க, நன்கு அறிமுகமான நபர்களை வேட்பாளர்களாக நிறுத்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, பிற கட்சிகளில் உள்ள முக்கியப் புள்ளிகள் மற்றும் தேர்தல் பணிகளில் அனுபவம் வாய்ந்த அதிருப்தி நிர்வாகிகள், உள்ளூர் செல்வாக்கு மிக்க நபர்களை தவெக பக்கம் ஈர்க்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. கிராமப்புறங்களில் ஏற்கெனவே தேர்தலில் போட்டியிட்டு நூலிழையில் வாய்ப்பை இழந்தவர்கள் மற்றும் கட்சிகளால் ஓரம் கட்டப்பட்ட நிர்வாகிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.
அந்தவகையில், தவெகவுக்கு இருக்கும் 35 சதவீத வாக்கு வங்கியை, உள்ளாட்சி தேர்தலில் முழுமையாக பயன்படுத்தி, பிரதான கட்சிகளை ‘வாஷ் அவுட்’செய்யும் முயற்சியில் தவெக மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
தற்போது தவெக, கட்சி ரீதியாக 132 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 132 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், கட்சியின் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், தொகுதி அடிப்படையில் 234 கட்சி மாவட்டங்களை உருவாக்கி, மொத்தம் 234 மாவட்டச்செயலாளர்களை நியமிக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளது.
நியமனங்கள் படிப்படியாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதிக ஆதரவாளர்களுடன் மாற்றுக் கட்சிகளில் இருந்து புதிதாக வந்து இணைந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவிவழங்க திட்டமிட்டுள்ளது. அதேபோல, சில எம்எல்ஏக்களுக்கும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளது.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தேர்தலில் தோல்வியைத் தழுவிய வேட்பாளர்களுக்கு வாரியத் தலைவர் உள்ளிட்ட முக்கிய அரசுப் பொறுப்புகளை வழங்கவும் தவெக தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதான கட்சியான திமுகவில் 78 மாவட்டங்களும், அதிமுகவில் 82 மாவட்டங்களும் உள்ளன. விசிகவில் ஏற்கெனவே 234 மாவட்டங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.