சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஊடக சந்திப்பு நடத்தியதாக திமுக வேட்பாளர் பரந்தாமன் மீது தவெக சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் 4-ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இன்று (அக்.6) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி அடுத்த 48 மணி நேரம் அமைதிக் காலமாகும். அதாவது, வேட்பாளர்கள் இந்த அமைதிக்காலத்தில் பொதுக்கூட்டம், ஊர்வலம், பிரச்சாரம், ஊடக சந்திப்புகள் என எதையும் செய்யக்கூடாது.
இந்தச் சூழலில், திமுக வேட்பாளர் பரந்தாமன், அக்.5-ம் தேதி (நேற்று) சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதாக பரந்தாமன் மீது சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகார் மனு அளித்தார்.
அதில், “தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு எங்கள் கட்சி வேட்பாளர் பிரச்சாரத்தை நிறுத்தியுள்ளார். ஆனால், திமுக வேட்பாளர் பரந்தாமன் ஊடகங்கள் வாயிலாக நேரடியாக வாக்குச் சேகரிக்கும் நோக்கில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். இது வாக்காளர்களின் சுதந்திரமான முடிவில் தலையிடும் சட்டவிரோத செயலாகும். எனவே, தேர்தல் விதிகளை அப்பட்டமாக மீறிய திமுக வேட்பாளர் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை அவர் மதுராந்தகம் தொகுதிக்குள் நுழைவதற்கும் தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.