சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 28 தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் பட்டியலை ஒரே கட்டமாக விஜய் வெளியிட்டார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் நேற்று அறிவித்தார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் அவர் போட்டியிடுகிறார். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா, ஜேசிடி பிரபாகர், ராஜ்மோகன், சிடிஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிச்செட்டிப் பாளையத்தில் போட்டியிடுகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. திமுக,அதிமுக கூட்டணி கட்சிகளில் பெரும்பாலும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கெனவே 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.
இதற்கிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடுகிறது என்பதை கட்சித் தலைவர் விஜய் சமீபத்தில் உறுதிசெய்தார். இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 28 தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் பட்டியலை ஒரே கட்டமாக விஜய் வெளியிட்டார். அதன்படி, பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.
தியாகராய நகர் - புஸ்ஸி ஆனந்த், வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா, ஆயிரம் விளக்கு - ஜேசிடி. பிரபாகர், எழும்பூர் - ராஜ்மோகன், திருப்பரங்குன்றம் - சிடிஆர். நிர்மல்குமார், கொளத்தூர் - வி.எஸ்.பாபு, சேப்பாக்கம் - செல்வம், விருகம்பாக்கம் - சபரிநாதன், வேளச்சேரி - கிறிஸ்டி பிரித்திவி, ஆர்.கே.நகர் - மரியவில்சன், துறைமுகம் - சினோரா அசோக், மயிலாப்பூர் - வெங்கட்ராமன், அண்ணா நகர் - ராம்குமார், சோழிங்கநல்லூர் - ஈசிஆர். சரவணன், ராயபுரம் - கோகுல், திரு.வி.க நகர் - பல்லவி,திருப்பூர் வடக்கு - சத்யபாமா, கவுண்டம்பாளையம் - கனிமொழி, ஆம்பூர் - இம்தியாஸ், திருச்செங்கோடு - அருண்ராஜ் போட்டியிடுகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையத்திலும், குப.கிருஷ்ணன் லால்குடியிலும் போட்டியிடுகின்றனர்.
இதேபோல மாற்றுக் கட்சியில் இருந்து வந்த பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 23 பெண்கள், 11 முஸ்லிம்கள், 11 கிறிஸ்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
‘மக்கள் பணத்தை சுருட்ட மாட்டேன்’ - விஜய் தலைமையில் அனைத்து வேட்பாளர்களும், ‘மக்கள் பணத்தை சுருட்ட மாட்டேன். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன். போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன். ஊழல் கறை படியவிட மாட்டேன். இது உறுதிமொழி அல்ல, உத்தரவாதம்’ என்று உறுதி ஏற்றனர்.
பறக்கும் படை சோதனை: வேட்பாளர்களை அறிமுகம் செய்த பிறகு, அவர்களை அழைத்து விஜய் சில ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அங்கு வந்து சோதனை நடத்தினர். தேர்தல் ஆணையம் அனுமதித்ததைவிட அதிக நபர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனரா என்று ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தேர்தலில் சீட் கிடைக்காத ஒருவர் 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் திரண்டு ஓட்டலுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாளான இன்றே தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தவெகவினர் மனு தாக்கல் செய்ய உள்ளனர். பெரம்பூரில் விஜய் மனு தாக்கல் செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது.
உதவியாளரின் மகனுக்கு வாய்ப்பு: விஜய்யிடம் கார் ஓட்டுநராக வேலைக்கு சேர்ந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன். தற்போது விஜய்யின் உதவியாளராக எந்நேரமும் அவரது நிழல்போல இருப்பவர். அவருக்கு கட்சிப் பொறுப்பு வழங்க விஜய் திட்டமிட்ட நிலையில், தனக்கு வயதாகிவிட்டதாக கூறி ராஜேந்திரன் மறுத்ததால், அவரது மகன் சபரிநாதனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கினார் விஜய். தற்போது சபரிநாதன் விருகம்பாக்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மேடையிலேயே தந்தை - மகன் இருவரும் கண்ணீர் மல்க விஜய்யை கட்டியணைத்து நன்றி தெரிவித்தது கூட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல தன் நீண்டகால நண்பரான இயக்குநர், நடிகர் ஸ்ரீநாத்தை தூத்துக்குடி வேட்பாளராக விஜய் அறிவித்துள்ளார். வேட்டைக்காரன், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.