சென்னை: வால்பாறை திமுக எம்எல்ஏவுக்கு எதிராக தவெக வேட்பாளர் தொடர்ந்த பொதுநல வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வால்பாறை (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட குட்டி என்ற சுதாகர் வெற்றி பெற்றார். இந்நிலையில், அவரை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ‘திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சுதாகர் தனது வேட்புமனுவில் இந்து மதத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருகிறார். இதனால், பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட சட்டப்படி கிறிஸ்தவரான அவருக்கு எந்த உரிமையும் இல்லை.
எனவே, அவரது சாதி சான்றிதழ் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். அந்த விசாரணையில் அவர் கிறிஸ்துவர் என்பது நிரூபணமானால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்து தேர்தலில் இரண்டாமிடம் பிடித்த தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தேர்தல் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குத்தான் தொடர முடியுமேயன்றி, பொதுநல வழக்கு தொடர முடியாது என்றும், எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் தெரிவித்தனர்.
அதையடுத்து இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், வழக்கை திரும்பப்பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.