மரகதம் குமரவேல், சத்தியபாமா, கணிதா சம்பத், கே.பானுமதி

 
தமிழகம்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: தவெக, அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

அக்.6-ம் தேதி வாக்குப் பதிவு, 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் கணிதா சம்பத், கே.பானுமதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், கடந்த 7-ம் தேதி மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்.6-ம் தேதி வாக்குப் பதிவும், 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. திமுக சார்பில் மதுராந்தகத்தில் ஐ.பரந்தாமன் மற்றும் தாராபுரத்தில் சுகன்யா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆளும் தவெகவின் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. முன்னதாக, சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமை மீதான அதிருப்தியால் சி.விஜய பாஸ்கர், எம்.ஆர்.விஜய பாஸ்கர், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், சத்திய பாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமானார்கள். இவர்களுக்கு தவெகவில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பொறுப்புகள் வழங்கப்பட்டன.

எனினும், இடைத்தேர்தலில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில்தான், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்திய பாமா ஆகியோரையே தவெக வேட்பாளர்களாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வரும், தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தவெக வேட்பாளர்களாக மதுராந்தகம் (தனி) - மரகதம் குமரவேல், தாராபுரம் (தனி) - சத்திய பாமா, ஆகியோர் போட்டியிடுகின்றனர். தவெகவினர் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத்தர வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

மரகதம், சத்யபாமா: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் மரகதம் குமரவேல். அதிமுகவில் கழக மகளிர் அணி இணை செயலாளராக இருந்தவர். இவர், திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழுத் தலைவராகவும், 2014-ல் காஞ்சிபுரம் எம்.பி.யாகவும், 2021- 26-ல் மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏவாக மீண்டும் தேர்வானார். அதன்பின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். தற்போது தவெக கழகத் துணை பொதுச் செயலாளர் பதவியில் உள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யபாமா, அதிமுகவில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். அதிமுகவில் திருப்பூர் எம்.பி.யாகவும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தாராபுரத்தில் வென்று எம்எல்ஏவாகவும் தேர்வு செய்யப்பட்டார். இவரும் பதவியை ராஜினாமா செய்து, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். தற்போது திருப்பூர் தென்கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.

அதிமுக வேட்பாளர்கள்: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, அதிமுக சார்பில் கடந்த 8-ம் தேதி முதல் நேற்று மாலை வரை கட்சி நிர்வாகிகளிடம் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.

இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களைக் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று அறிவித்தார். அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் கே.பானுமதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். கணிதா சம்பத் (61), அதிமுகவில் மாவட்ட பிரதிநிதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்து தற்போது கட்சியின் மகளிரணி இணை செயலாளராக உள்ளார்.

இவர், அதிமுக சார்பில் 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக எம்எல்ஏ ஆனார். பின்னர் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராகக் கணிதா சம்பத் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு இந்தத் தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக கணிதா சம்பத் கூறும்போது, ‘‘மதுராந்தகம் இரட்டை இலையின் கோட்டை. ஏற்கெனவே கடந்த 2011 தேர்தலில் 18,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, இத்தொகுதியில் வெற்றிக்கனியைப் பறித்து கொடுப்பேன்’’ என்றார்.

தாராபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.பானுமதி, திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளராக உள்ளார். இவர் திமுக ஆட்சி காலத்தில் திருப்பூர் மாவட்ட ஊராட்சியின் 12-வதுவார்டு கவுன்சிலராக இருந்தார். அப்போது திமுக அரசுக்கு எதிராக ஏராளமான போராட்டங்களில் பங்கேற்று இருக்கிறார்.

வேட்பாளர்கள் இருவரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியைச் சென்னையில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை, நாம் தமிழர் கட்சி செப்.13-ம் தேதி அறிவிக்க உள்ளது.

SCROLL FOR NEXT