

கோப்புப் படம்
மதுரை: ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை பயணத்துக்காக சில நாட்களுக்கு முன்பு குறைந்த கட்டணத்தில் பதிவு செய்த முன்பதிவு டிக்கெட்டுகளை பேருந்து பழுதடைந்து விட்டதாகக் கூறி ரத்து செய்துவிட்டு, கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன ஆம்னி பேருந்து நிறுவனங்கள்.
தமிழகத்தில் செப்.14 - திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.3,999 வரையிலும், மதுரைக்கு ரூ.4,000 வரையிலும், கோவைக்கு ரூ.6,154 வரையிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் செப். 13 மற்றும் 14-ம் தேதி இரவில் சென்னைக்கு திரும்ப திருச்சியிலிருந்து ரூ.4,499, மதுரையிலிருந்து ரூ.4,899, கோவையிலிருந்து ரூ.4,799 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் சாதாரண நாட்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட 4 மடங்குவரை அதிகம் என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதேபோல், அக்.19, 20-ல் ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அக். 17, 18 சனி, ஞாயிறு வருகிறது. இந்த 4 நாள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களில் பலர் கடந்த வாரமே ஆம்னிபேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். மேலும் நவம்பர் மாதத்தில் தீபாவளி விடுமுறை பயணத்துக்கும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். இந்த முன்பதிவின் போது சாதாரண நாளில் வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆயுத பூஜை, தீபாவளி விடுமுறைக்காக கடந்த வாரம் முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டு பயணிகளுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டன. அதில், நீங்கள் முன்பதிவு செய்திருந்த பேருந்து பழுதடைந்துள்ளதால் முன்பதிவு செய்திருந்த டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டிருந்ததை பார்த்ததும் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
டிக்கெட் ரத்தானவர்கள் அதேநாளில் அதே பேருந்தில் மறுபடியும் டிக்கெட் முன்பதிவுக்கு முயலும்போது கட்டணம் 3 மடங்கு உயர்ந்திருந்ததைப் பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்தனர். மதுரையிலிருந்து கோவைக்குவசூலிக்கப்பட்ட ரூ.700 கட்டணம், டிக்கெட் ரத்தானதுக்குப் பிறகு ரூ.1,500 ஆக உயர்ந்துள்ளது. எனவே, பண்டிகை நாளில் டிக்கெட் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி வசூலிக்கும் நோக்கத்தில் பேருந்து பழுதடைந்ததாக கூறி முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்து செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் ஆனந்த்ராஜ் கூறும்போது, ‘‘ஆம்னி பேருந்து நிறுவனம் கூறுவதுபோல் அந்த பேருந்து பழுதடைந்திருந் தாலும் பயணத்துக்கு ஒரு மாதம் இருக்கும்போது அதற்குள் அதை சரி செய்துவிட முடியாதா? அல்லது மாற்றுப் பேருந்தை இயக்க முடியாதா? பண்டிகை கால நெரிசலை பயன்படுத்தி பலமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காக குறைந்த கட்டணத்தில் பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்வது சட்டவிரோதம்.
ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணத்தை ரகசியமாக இல்லாமல் ஆன்லைன் முன்பதிவு இணையதளங்களிலேயே வெளியிட்டு வசூலிக்கின்றன.ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயம் செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்பே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு இன்னும் செயல்படுத்தப்படவில்லை. கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.