தமிழகம்

புதுச்சேரி ரேஷன் கடை விவகாரத்தில் விஜய் பேசியது என்ன? - தவெக நிர்வாகி விளக்கம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழக புதுச்சேரி மாநில நிர்வாகியும் முன்னாள் எம்எல்ஏவுமான சாமிநாதன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய போது, புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை, புதுச்சேரியில் ரேஷன் கடைகள் செயல்பட வில்லை என சுட்டிக்காட்டி பேசினார்.

இதற்கு பதில் அளித்திருக் கும் அமைச்சர் நமச்சிவாயம், தவெக தலைவர் புரிதல் இல்லாமல் பேசுகிறார் எனவும், எழுதிக் கொடுத்தவர்கள் சரியாக எழுதிக் கொடுக்கவில்லை என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

ரேஷன் கடையை பற்றி பேசுவதற்கு முன்பாக, ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்கிவிட்டுதான் அமைச்சர் நமச்சிவாயம் பேச வேண்டும். கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்பு ரேஷன் கடையை திறக்காமல் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகுதான் ரேஷன் கடையை மீண்டும் திறந்தீர்கள். மற்ற மாநிலங்களில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவை வழங்கப்படுகிறது.

புதுச்சேரியில் அரிசி மட்டும் தான் வழங்குகிறீர்கள். தீபாவளி மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் கூட காலதாமதம் செய்தீர்கள். ஐந்தாண்டுகள் ஆகியும் இதுவரையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை.

ரேஷன் கடைகளைத் திறக்காததால் கடந்த 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்கு கேட்க சென்ற அமைச்சர் நமச்சிவாயத்துக்கு மக்கள் பதிலடி கொடுத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். 6 மாதங்களுக்கு முன் ரேஷன் கடைகளில் கோதுமை வழங்குவதாக அறிவித்தீர்கள்.

இதுவரை வழங்கவில்லை. இப்படி புதுச்சேரியில் ரேஷன் கடையில் நடக்கும் அவலங்கள் பற்றி, மக்களின் சிக்கல் பற்றி தவெக தலைவர் விஜய் பேசியிருப்பதை பொதுமக்கள் வரவேற்கிறார்கள்.

ஆனால் நமச்சிவாயம் ஏதோ சொல்ல வேண்டுமென குறை கூறுகிறார். பாஜக அரசு ‘பெஸ்ட் புதுச்சேரி’யை உருவாக்கும் என்று கூறி வருகிறார்கள். தவெக தலைவர் விஜய் கூறியிருப்பது போல புதுச்சேரியில் இன்னும் ஐடி பார்க் தொடங்கவில்லை.

சுமார் இரண்டரை லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். சிறப்பாக இயங்கி வந்த மில்கள் எல்லாம் மூடப்பட்டு கிடக்கிறது. இதற்காகவும் விஜய் குரல் கொடுத்துள்ளார்.

புதுச்சேரி வளர்ச்சிக்காக பேசி வரும் தவெக தலைவர் விஜயைப் பற்றி அவதூறாக அமைச்சர் நமச்சிவாயம் பேசினால் கடந்த 2024 மக்களவைத் தேர்தலை போல் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவருக்கு தக்க பதிலடி மக்கள் கொடுப்பார்கள் என்றார்.

SCROLL FOR NEXT