

பாரதியாரோடு புதுச்சேரியில் நெருக்கமாக இருந்த வ.ராமசாமி, ‘மகாகவி பாரதியார்’ (1944) என்ற பெயரில் ஒரு வரலாறு எழுதினார். பாரதியின் புதுச்சேரி வாழ்க்கை குறித்த நினைவுக் குறிப்புகளாக வ.ரா.
இவ்வரலாற்றை எழுதியிருக்கிறார். பாரதியாரின் மனைவி செல்லம்மாள் சொல்லச் சொல்ல, மூத்த மகள் தங்கம்மாள் எழுதிய நூல் ‘தவப் புதல்வர் பாரதியார் சரித்திரம்’ (1941).
அடுத்த பதிப்பில் ‘தவப் புதல்வர்’ என்ற சொல் நீக்கப்பட்டு, ‘பாரதியார் சரித்திரம்’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. ‘இந்தியா’ பத்திரிகையை நடத்திய மண்டயம் நிவாஸாச்சாரியாரின் மகள் யதுகிரி அம்மாள், பாரதியின் புதுச்சேரி வாழ்க்கையில் (1912-1918) நிகழ்ந்த நிகழ்வுகளை ‘பாரதி நினைவுகள்’ (1954) என்ற பெயரில் எழுதியுள்ளார். 1938-39ஆம் ஆண்டுகளில் இதனை எழுதியிருக்கிறார்.
பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் (1908-1918), ரா.கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த சிறுவனுக்கு 1913ஆம் ஆண்டு உபநயன சடங்கு செய்து அந்தணராக்கினார். ரா.கனகலிங்கம், ‘என் குருநாதர் பாரதியார்’ (1947) என்றொரு நூல் எழுதியிருக்கிறார்.