டிடிவி தினகரன்
வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக பெண்களின் அமைதிப் புரட்சியே திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிடிவி. தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை, கஞ்சா போதையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது மிகவும் வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது.
பள்ளி, கல்லூரிகள் தொடங்கி பட்டிதொட்டியெங்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் அலட்சியத்தால், இந்தியாவிலேயே குற்றச் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறும் மாநிலங்களில் முதலிடத்தை நோக்கி தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இது தமிழகத்துக்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டிய கடமை காவல்துறையினருக்கு உள்ளது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும் ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாக காவல்துறையினர் செயல்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு திமுக ஆட்சியில் சீர்குலைந்துள்ளது. அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாத திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்களிடம் அமைதிப் புரட்சி ஏற்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியும் பெண்களின் அமைதிப் புரட்சியும் வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத திமுகவிற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளியை வைக்கப்போகிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.