தமிழகம்

“துரியோதன கும்பலிடம் போய் சேர்ந்த ஓபிஎஸ்” - போடியில் டிடிவி.தினகரன் காரசாரம்

செய்திப்பிரிவு

“சட்டசபையில் ஜெயலலிதாவை தாக்கிய துரியோதன கும்பலிடம் போய் சேர்ந்திருக்கிறார் ஓபிஎஸ்” என டிடிவி.தினகரன் கடுமையாக தாக்கிப் பேசினார்.

தேனி மாவட்டம் போடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமியை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று மாலை வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது; வரும் வழியில் ஒரு விளம்பர தட்டியைப் பார்த்தேன். அதில் உள்ள திமுக வேட்பாளரை (ஓபிஎஸ்) பார்த்ததும் திக்கென்று ஆகி விட்டது. அவரை நான் தாக்கிப் பேச இங்கு வரவில்லை.

          

அரசியலில் உச்சப்பட்ச நிலையை அடைந்துவிட்டு இன்று, எம்ஜிஆர், ஜெயலலிதாவால் தீயசக்தி என்று கூறிய கட்சியில் போய் அவர் சேர்ந்திருக்கிறார். உயிருடன் இருந்த எம்ஜிஆரை இறந்துவிட்டதாக கூறி பொய் பிரச்சாரம் செய்தவர் கருணாநிதி. அவரை எல்லாம் ஓபிஎஸ் மிஞ்சிவிட்டார். பெரியகுளம் நகரச் செயலாளராக இருந்த ஓபிஎஸ்ஸை நான் சொன்ன ஒரு காரணத்துக்காக மாவட்ட செயலாளராக ஜெயலலிதா மாற்றினார். படிப்படியாக எம்எல்ஏ, அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் முதல்வர் என்று ஓபிஎஸ் அரசியலில் உச்சம் தொட்டது அதிமுக-வில் தான். கோடிக்கணக்கான தொண்டர்களின் உழைப்பினால் தான் இந்த பதவிகள் எல்லாம் அவருக்குக் கிடைத்தது.

இதை எல்லாம் மறந்து எப்படி திமுக-வில் இணைய முடிகிறது. எப்படி இவருக்கு தூக்கம் வருகிறது. மனச்சாட்சியே கிடையாதா? எப்படி வீட்டில் இவருக்கு சாப்பாடு போடுகிறார்கள் என்றே தெரியவில்லை. பதவி, பணம் இருந்தால் தான் ஓபிஎஸ்ஸை வீட்டிலேயே சேர்த்துக் கொள்வார்கள் போல. என்னிடமும் தான் திமுக தரப்பிலிருந்து பேசினார்கள். நான் சேர்ந்திருந்தால் என்னை வீட்டிலேயே சேர்த்திருக்க மாட்டார்கள். சாப்பாட்டில் எதையாவது வைத்து விடுவார்கள். ஜெயலலிதா மீதான விசுவாசத்தால் நான் திமுக-வுக்கு பெப்பே கொடுத்துவிட்டேன்.

சட்டசபையில் ஜெயலலிதாவை தாக்கிய துரியோதன கும்பலிடம் போய் சேர்ந்திருக்கிறார் ஓபிஎஸ். அதிமுக-வில் சேர்த்துக் கொள்ளாததால் தான் திமுக-வில் சேர்ந்ததாக கபட நாடகம் ஆடுகிறார். தனிக்கட்சி கூட அவர் ஆரம்பித்திருக்கலாம். ஒரு தொண்டனாகக் கூட இருந்திருக்கலாம். அதை விடுத்து காலமெல்லாம் எதிர்த்து நின்ற திமுக-வில் சேர்ந்தது, அக்கட்சிக்கு பிடித்த கெட்ட நேரம் தான். ஓபிஎஸ் பரதன் அல்ல ராவணன், இவருக்கு போடியில், பெரியகுளத்தில் உள்ளது எல்லாம் பரம்பரை சொத்தா? காசை நம்பித்தான் இங்கு வேட்பாளராக நிற்கிறார். இங்கு திமுக-வில் லட்சுமணன் போன்ற நல்ல வேட்பாளர்கள் போட்டியிட காத்திருந்தனர். ஆனால் ஓபிஎஸ், இடையில் புகுந்து அதைக் கெடுத்து விட்டார். ஸ்டாலின் பல வாக்குறுதிகளைத் தந்து அவரை ஏமாற்றி விட்டார். அவரது ஆட்சி முடியப்போகிறது.

எனக்கும், பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால், நாங்கள் ஜெயலலிதா கொள்கையில் விசுவாசமாக இருந்தோம். போடி தொகுதியில் ஓபிஎஸ்ஸுக்கு சரியான பாடம் புகட்டுங்கள். இல்லை என்றால் அரசியலில் நியாயம் தர்மம் இல்லாமலே போய் விடும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT