

சென்னையில் தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தவெக தலைவர் விஜய் நேற்று சாலை வலம் நடத்தினார். தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று, சென்னையில் உள்ள தி.நகர், ஆயிரம் விளக்கு மற்றும் எழும்பூர் தொகுதிகளில் விஜய் நடத்திய பிரம்மாண்ட சாலை வலத்தில் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
நேற்று மதியம் 3 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து பிரச்சார வாகனத்தில் விஜய் புறப்பட்டார். நந்தனம் சி.ஐ.டி நகரில் இருந்து சாலை வலத்தைத் தொடங்கிய அவர், தி.நகர் தொகுதி வேட்பாளர் என்.ஆனந்துடன் பிரச்சார வாகனத்தில் வலம் வந்தார். முத்துரங்கன் சாலையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில், ஆனந்துக்கு ஆதரவாக விஜய் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அன்பழகன் மேம் பாலம், வடக்கு உஸ்மான் சாலை, பசுல்லா சாலை வழியாக ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் நுழைந்த விஜய்யுடன், அந்தத் தொகுதியின் வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகர் இணைந்து கொண்டார். அவரது கையை உயர்த்திப் பிடித்து விஜய் வாக்குசேகரித்தபோது, தொண்டர் ஒருவர் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை விஜய்யிடம் நீட்டினார். அந்தப் புகைப்படத்தைக் காண்பித்து, எம்.ஜி.ஆர் பாணியில் விஜய் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து, வள்ளுவர் கோட்டம் வழியாக எழும்பூர் தொகுதிக்கு வந்த விஜய் அங்கு வேட்பாளர் ராஜ்மோகனுடன் இணைந்து சாலை வலத்தைத் தொடர்ந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை நோக்கி, ‘விசில்' சின்னத்தைக் காண்பித்து உற்சாகமாக வாக்குச் சேகரித்தார். சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், வேப்பேரி, பெரியமேடு வழியாகச் சென்ற சாலை வலம் இறுதியாகச் சென்னை சென்ட்ரல் ரிப்பன் மாளிகை அருகே நிறைவடைந்தது. எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட வேப்பேரியில் பிரச்சாரம் செய்வதாக இருந்த விஜய், கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் கடைசி நேரத்தில் அங்கு தனது பிரச்சாரத்தை ரத்து செய்தார். இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
விஜய்யின் சாலை வலத்தை முன்னிட்டு சென்னை மாநகரக் காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. மூன்று கூடுதல் ஆணையர்கள் தலைமையில் 2 ஆயிரம் போலீ ஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.