மதுரை: “திமுக - அதிமுக கூட்டுக் களவாணி என முதல்வர் விஜய் கூறுகிறார். ஆனால், அவர்தான் ஒவ்வொரு கட்சிகளிலும் உள்ள எம்எல்ஏக்களை திருடி வருகிறார். முதல் ‘எம்எல்ஏ களவாணியே விஜய்தான்” என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார்.
மதுரை இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “நாங்கள் அதிமுகவுடன் இணைந்துதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். கரூர் சம்பவத்தில் காவல் துறை தவறாக வழிநடத்தியதாகக் கூறும் முதல்வர் விஜய், அந்த துறையை அவர்தான் வைத்துள்ளார். அந்த துறையினர் மீது என்ன நடிவடிக்கை எடுத்துள்ளார்?
விஜய் கூறுவதெல்லாம் உண்மையா என்பது குறித்து சிபிஐ விசாரணை சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் பழியை யார் மீதும் சொல்வது சரியாக இருக்காது. கரூர் துயர சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசுப் பணி வழங்கி, தவறான முன்னுதாரணத்தை செய்து கொண்டிருக்கிறது தவெக. இன்னும் அவர் சினிமா ஷூட்டிங் போன்றே நினைத்துக் கொண்டிருக்கிறார். அரசியலை விட்டு தமிழக மக்கள் யாரை வெளியேற்றுவார்களோ அவர்களை வெளியேற்றுவார்கள்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெருக்குவதற்கு, வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவர வேண்டும். அடிப்படை வசதிகளை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். அதைவிட்டு, மேடைகளில் ஏறி மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசக் கூடாது, விவசாய கடனை ரத்து செய்யச் சொல்லி எந்த விவசாயியும் கேட்கவில்லை, ஆட்சிக்கு வந்த உடனே கடனை ரத்து செய்வேன் என்று கூறியது ஏமாற்று வேலை.
இதற்காக போராடிய ஒரு விவசாயிகூட இறந்துவிட்டார். அவருடைய வீட்டில் யாருக்காவது வேலைவாய்ப்பு கொடுத்தால், அதை எல்லாரும் பாராட்டுவார்கள்.
திமுக, அதிமுக கூட்டுக் களவாணி என முதல்வர் விஜய் கூறுகிறார். ஆனால், அவர்தான் ஒவ்வொரு கட்சிகளிலும் உள்ள எம்எல்ஏக்களை திருடி வருகிறார். அவர்தான் முதல் எம்எல்ஏ களவாணி.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கொண்டு வருவது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும். அவர் ரீல் விடுவதை நிறுத்திவிட்டு ரியல் ஆட்சியை நடத்த வேண்டும்.
அதிமுகவும், திமுகவும் கூட்டு சேரக்கூடிய சூழலை நாம் கணிக்க முடியாது. அரசியல் சூழல் யாரை வேண்டுமானாலும் மாற்றும். அதைத்தானே கடந்த காலத்தில் பார்த்திருக்கோம். அண்ணாவும், ராஜாஜியும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இதுபோன்று பல உதாரணங்கள் உள்ளன. அதுபோல கூட்டணியை அரசியல் சூழ்நிலைதான் முடிவு செய்யும்.
முதல்வர் விஜய் தனது ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறாரே தவிர, தமிழ்நாட்டு வளர்ச்சியில் அவருக்கு ஈடுபாடு இல்லை.
விஜயகாந்த் சினிமாவில் மட்டும்தான் நடித்தார். வெளியில் நடிக்கவில்லை. எனவே, முதல்வர் விஐய்யை விஜயகாந்துடன் ஒப்பிட வேண்டாம்” என்று தினகரன் கூறினார்.