டிடிவி தினகரன்|கோப்புப் படம்
அதிமுக-வின் 18 எம்எல்ஏ-க்களை அந்த தொகுதி மக்களிடம் சொல்லிவிட்டுத்தான் தகுதி நீக்கம் செய்தாரா பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரை திருமங்கலத்தில் நேற்று அமமுக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற டிடிவி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டணி குறித்து சில கட்சிகள் எங்களோடு பேசிக் கொண்டிருக் கின்றன. இது குறித்து உரிய முடிவு எடுத்த பின்னர், கூட்டணி குறித்து முறைப்படி தெரிவிக்கப்படும். துரோகத்தின் நோபல் பரிசு பெற தகுதி உடையவர் பழனிசாமி. 2017 முதல் அவர் செய்த துரோகங்களுக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர் செய்த துரோகங்களுக்கு 2026 தேர்தலில் இறுதித் தீர்ப்பு எழுதப்படும்.
2017 பிப்ரவரியில் அதிமுக-வின் 18 எம்எல்ஏ-க்களை அந்த தொகுதி மக்களிடம் சொல்லிவிட்டுத்தான் தகுதி நீக்கம் செய்தாரா? அதிமுக-வின் அடிப்படை சட்டவிதிகளை பொதுக்குழு என்ற பெயரில் மாற்றினாரே... இதெல்லாம் அதிமுக தொண்டர்களிடம் கேட்டுத்தான் மாற்றினாரா? இவ்வாறு இருக்க, செங்கோட்டையன் ராஜினாமா செய்தது குறித்து கேள்வி எழுப்புகிறார்.
இரட்டை இலை சின்னத்தை வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக, பணத் திமிரில், பதவி வெறியில் பேசிக்கொண்டிருக்கும் பழனிசாமிக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவர். அதிமுக-வை மகன், மைத்துனர், சகலை என குடும்ப கட்சியாக, வட்டாரக் கட்சியாக மாற்றியுள்ளார் பழனிசாமி. தொண்டர்கள் இப்போது தூங்குவது போல் இருந்தாலும், தேர்தலுக்குப் பின்னர் விழித்துக் கொள்வர். பாஜக கூட்டணிக்கு வரும்படி யாரும் எங்களை அழைக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
டிச.10 முதல் விருப்ப மனு விநியோகம்: தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை அடையாறில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் வரும் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை விருப்ப மனு பெறலாம். விருப்ப மனு கட்டணம் தமிழகத்துக்கு ரூ.10 ஆயிரம். புதுச்சேரிக்கு ரூ.5 ஆயிரம். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள் ஜனவரி 3 என்று டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.