கோப்புப் படம்

 
தமிழகம்

“டெங்கு உயிரிழப்புகளுக்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்” - தினகரன்

செய்திப்பிரிவு

சென்னை: “முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படும் மருத்துவத் துறையின் அலட்சியப் போக்கே தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 9 பேர் உயிரிழப்புக்கு காரணம்” என அமமுக பொதுச் செயலர்  டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதில் 9 பேர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் (Aedes) கொசுக்களை ஒழிப்பதிலும் சுகாதாரத்துறை காட்டிய அலட்சியமே 9 பேரின் உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப பரவும் நோய்த்தொற்றுகளின் பாதிப்பு அதிகரித்த பின்னரே நடவடிக்கை எடுக்கும் அணுகுமுறையைக் கைவிட்டு, பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு சுகாதாரத்துறைக்கு உண்டு என்பதை இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.

எனவே, தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, டெங்குவால் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்கிட வேண்டும் என சுகாதாரத்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்தும் இந்நேரத்தில், பொதுமக்களும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT