

மதுரை: “ரீல்ஸ், ரீல் விடுவதைத்தான் தவெக ஆட்சியின் சாதனையாக பார்க்க முடிகிறது” என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “இந்தியாவில் சுமார் 32 இடங்களில் மதர்சன் நிறுவனம் உள்ளது. சென்னையிலும் அதற்கு அலுவலகம் இருப்பதாக செய்தி வந்துள்ளன. அப்படி இருக்கும்போது, முதல்வர் லண்டன் சென்று மதர்சன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியாவில் இருக்கும் நிறுவனத்துக்கு, அதன் கிளை அலுவலகம் தமிழகத்திலேயே இருக்கும் நிலையில் இங்கேயே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கலாம். இதற்காக லண்டன் சென்று மதர்சன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததன் நோக்கம் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
முதல்வர் தொழில் முதலீட்டை ஈர்க்கப் போயிருந்தாரா அல்லது இன்பச் சுற்றுலா போயிருந்தாரா என மக்கள் கேட்கும் நிலை எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பெரும்பாலும் அவர்களின் சொந்த பிரச்சினைகளைப் பேசியதைத்தான் பார்க்க முடிந்தது. மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை.
ஒரு நாளுக்கு 10 மணி நேரம் நடந்த சட்டப்பேரவை நிகழ்வில் 3 மணி நேரம் தான் மக்களின் பிரச்சினைகள் பேசியிருப்பார்கள். மீதி 7 மணி நேரம் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி குற்றம்சாட்டி அவையின் நேரம் வீணடிக்கப்பட்டது. ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெறாமல் மக்கள் எள்ளி நகையாடும் அளவுக்கு பேரவை நிகழ்வுகள் அமைந்திருந்தது.
பாரம்பரியமிக்க சட்டப்பேரவையில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெறாமல், சினிமாவில் வரும் சட்டப்பேரவையாகத்தான் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் தற்போது கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. ஆனால் அமைச்சரைக் கேட்டால் மின்வெட்டு இல்லை என்கிறார். அவர்களின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில், வருவாய்த் துறை அமைச்சர் பேட்டி கொடுக்கும்போதும் மின்வெட்டு ஏற்படுகிறது. ஆனால் நிருபரின் கேள்விக்கு மின்வெட்டு இல்லை என்று அமைச்சர் சொல்கிறார்.
மின்வெட்டு இல்லை என்று கூறும் மின்சாரத் துறை அமைச்சர், தமிழகத்தில் மின் பற்றாக்குறை இருப்பதாகவும், அதற்காக 2000 மொகாவாட் மின்சாரம் வாங்கப்படும் என்றும் கூறுகிறார். மின்வெட்டு இல்லை என்றால் ஏன் பற்றாக்குறை, வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டும். ஆக, தமிழகத்தில் மின்வெட்டு இருப்பதே யதார்த்தமான நிலைமை.
இரவிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் தூக்கத்தைத் தொலைத்துள்ளனர். மக்கள் தூக்கத்தைத் தொலைக்க வைத்த அரசு, இந்த தவெக அரசு. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. ஆகவே, இந்த அரசு இனியாவது விழித்துக்கொண்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.
தமிழக வெற்றி கழகத்தின் அறிவிப்பில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை. ஒரு சில திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுளளன.
தமிழகத்தில் இன்று கடன் அதிகரித்துவிட்டது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, ரூ.40 ஆயிரம் கோடி கடன் பெற்றிருப்பதாகவும், அதில் ரூ.36 ஆயிரம் வருவாய் செலவு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இவ்வளவு கடன் இருக்கும்போது, புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?
நிதிநிலையை சரிசெய்த பிறகு புதிய தலைமைச் செயலகம் கட்டலாம். இதில் மாறுபட்டக் கருத்து இல்லை. புதிய தலைமை செயலகத்துக்கான இடமும் யாருக்கும் பாதிப்பு இல்லாத, போக்குவரத்து நெரிசல் இல்லாத, அனைவரும் வந்து செல்ல வசதியான இடத்தினை தேர்வு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. தவெக ஆட்சி ஏற்பட்ட பிறகு தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிபறி, செயின் பறிப்பு, பாலியல் சீண்டல்கள் நடைபெறாத நாளே இல்லை. அந்த அளவுக்கு ஒரு மோசமான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் சொல்கிறார்கள். புதிய அரசு அமைந்த பிறகுதான் ஊழல் அதிகரித்திருக்கிறது. கொடுத்ததை வாங்கிய நிலை மாறி, இவ்வளவு வேண்டும் என கேட்கும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றாததால் அவர்கள் தொடர் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் எல்லோரும் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அரசு பொறுப்பேற்ற நான்கு மாதத்தில் இவ்வளவு போராட்டம் நடந்து வருகிறது.
விலைவாசி ஏற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் சரிசெய்ய இந்த அரசு முன்வரவில்லை. ஆனால் ஏதாவது ஒரு பேட்டி கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ரீல்ஸ், ரீல் விடுவதைத்தான் இந்த ஆட்சியின் சாதனையாக பார்க்க முடிகிறது’ என்று பழனிசாமி தெரிவித்தார்.