மதுரை கேகே.நகரிலுள்ள சிலைக்கு மாலை அணிவிக்க திறந்த வேனில் டிடிவி.தினகரன் வந்த காட்சி. படம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
தனித்து விடப்பட்டவர்கள் உணர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவேண்டும் என, மதுரையில் டிடிவி. தினகரன் கூறினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மதுரை கேகே. நகரிலுள்ள அவரது சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கவேண்டும் என்பதற்காக முழு மனதுடன் தமிழகம், புதுச்சேரியிலும் ஒன்றிணைந்துள்ளோம். தமிழகத்தில் அதிமுக தலைமையில் இணைத்து இருக்கிறோம். கடந்த 10 ஆண்டாக கொள்கை கூட்டணி என்ற திமுக -காங்கிரசில் கூட்டணியில் உடன்பாடு ஏற்படவில்லை.
அது தொடருமா என்பதே தெரியாத நிலை உள்ளது. இதை திசை திருப்பவே தேசிய ஜனநாயக கூட்டணி வலுவில்லை. அங்கு குழப்பம் உள்ளது என, பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. காங்கிரஸ் கட்சி 35 முதல் 40 தொகுதிகள் கேட்கின்றனர். கூட்டணி மந்திரி சபை அமைக்கவேண்டும் என, கேட்கின்றனர் என்பது தான் உண்மை. திமுக ஒத்துக்கொள்ளவில்லை. அக்கூட்டணி தொடருமா என்பதே தெரியவில்லை.
நான் தேர்தலில் போட்டியிடவில்லை என, அறிவித்து உள்ளேன். தேவையற்ற குழப்பத்தை தவிர்க்கவே போட்டி யிடவில்லை. எவ்வித மன வருத்தமும் இல்லாமல் அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும். பாஜக வழிகாட்டுதலில் செயல்பட்டு, அதிமுகவில் இடங்களை பெறுவோம். அம்மாவின் ஆட்சி உறுதியாக அமையும்.
தமிழகத்தில் ஊழல், மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவே ஓரணியில் இணைந்துள்ளோம். தமிழக மக்கள் நாங்கள் வலுவான கூட்டணி என்பதை உணர்ந்துள்ளனர். ஓபிஎஸ் தனிப்பட்ட முறையில் எல்லா உரிமையும் உள்ளது. அவர் எந்த கூட்டணியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அது அவரது விருப்பம்.
ஆனால் சட்டமன்றத்தில் அவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசியோடு திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சொன்னதை அம்மாவின் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள். அதிமுகவை உருவாக்கியதே திமுகவுக்கு எதிராகத்தான்.
50 ஆண்டுக்கு மேலாக திமுக எதிர்ப்பிலுள்ள எங்களது தலைவர்கள், தொண்டர்களை அவமானப்படுத்துவது போன்று பேசியதை கண்டிக்கிறோம். 99.1 சதவீதம் அனைவரும் ஓரணியில் இருக்கிறோம். ஒருசிலர் தனித்துவிடப்பட்டவர்கள் உணர்ந்து அவர்களும் எங்களுக்கு ஆதரவளிக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.