விஜயகாந்த் 60 கி.மீ. வேகப் புயல் என்றால் விஜய் 100 கி.மீ. வேகத்தில் வரும் புயல். இதனால் திமுகவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய்யால் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். சொல்லப்போனால், விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விட இது அதிகமாக இருக்கும். விஜயகாந்த் 60 கி.மீ வேகத்தில் வந்த புயல் என்றால், விஜய் 100 கி.மீ வேகத்தில் வரும் புயல்.
இதன் காரணமாக, 2006 தேர்தலை விடவும் இந்த முறை திமுக கடுமையான பாதிப்புக்குள்ளாகும். கடந்த 2006 தேர்தலில் விஜயகாந்தின் வருகையால்தான் திமுக 'மைனாரிட்டி' அரசாகப் பொறுப்பேற்கும் சூழல் உருவானது. அப்போது திமுக, அதிமுக ஆகிய இரு தரப்பிற்குமே பாதிப்பு இருந்தது. ஆனால், 2026-ல் விஜய்யால் அதைவிட அதிக பாதிப்பு ஏற்படும். அன்று விஜயகாந்த் 8 சதவீத வாக்குகளைப் பெற்றதுடன் ஒரு தொகுதியிலும் வென்றார்.
விஜய் பாதிப்பை ஏற்படுத்துவார் என்று நான் சொல்வதால், அவருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை. நான் எதார்த்தமான கள நிலவரத்தைச் சொல்கிறேன்; அதற்காக நான் அவரோடு இணைவேன் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம். எனக்கு அவரைப் பார்த்துப் பொறாமையும் இல்லை, திமுகவை போல பயமும் இல்லை.
முதலமைச்சர் ஸ்டாலினும், உதயநிதியும் விஜய்யைப் பற்றி நேரடியாகப் பேச அஞ்சுகிறார்கள். அவர்களைப் போல மறைமுகமாகத் தாக்காமல், நான் எதையும் நேரடியாகவே பேசுவேன்.
அன்றைக்கு அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் விமர்சித்தபோது, 'முதலில் அவரை வீட்டை விட்டு வெளியே வரச் சொல்லுங்கள்' என்று துணிச்சலாகச் சொன்னவனும் நான்தான்.இவ்வாறு அவர் கூறினார்.