திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் அலுவலகத்தில் கடந்த நவ.13-ல் பதவியேற்ற அறங்காவலர்கள். உடன், கோயில் துணை ஆணையர் ஜி.செல்வி.
மதுரை: தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைத்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பதவியேற்ற 14 நாட்களிலேயே அறங்காவலர்கள் 5 பேரும் பதவியை இழந்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர்களாக 5 பேரை தவெக அரசு நியமித்து கடந்த நவ.13-ல் உத்தரவு பிறப்பித்தது. ஏற்கெனவே திமுக ஆட்சியில் அறங்காவலராக இருந்த வ.சண்முகசுந்தரம் மற்றும் சி.ராஜபாண்டியன், க.அழகப்பன், ரெஜினாதேவி, சித்ரா ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் நவ.13-ம் தேதி கோயில் துணை ஆணையர் அலுவலகத்தில் பொறுப்பேற்றனர். அன்றே அறங்காவலர் குழுத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தி, வ.சண்முகசுந்தரம் தலைவராகத் தேர்வானார்.
உச்ச நீதிமன்றத்தில் கார்த்திகை தீப விவகாரம் தொடர்பான வழக்கு நவ. 14-ல் விசாரணைக்கு வருவதால், நவ. 13-ல் ரகசியமாக அறங்காவலர்கள் நியமனமும், பதவியேற்பு விழாவும் நடந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவால், பதவியேற்ற 14 நாட்களில் அறங்காவலர்கள் 5 பேரும் பதவியை இழந்துள்ளனர்.
அறங்காவலர் குழு பின்னணி: அறங்காவலர் குழுத் தலைவரான வ.சண்முகசுந்தரம், தனியார் நிறுவனத்தில் பிஆர்ஓவாக பணியாற்றியவர். ஆன்மிகத்தில் நாட்டமுடையவர். அறங்காவலர் சி.ராஜபாண்டியன் மதுரை திருநகரைச் சேர்ந்த தவெக நிர்வாகி. மற்றொரு அறங்காவலர் க.அழகப்பன், மார்க்சிஸ்ட் கட்சியின் துணை அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி.
இவர் தீபம் ஏற்றுவதற்கு எதிராக ஊடகங்களில் கருத்துகளைச் சொன்னவர். அறங்காவலர் ரெஜினாதேவியின் கணவர் வாடிப்பட்டி பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். மற்றொரு அறங்காவலர் சித்ரா, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் செல்லையாவின் உறவினர் பரிந்துரையில் இப்பதவிக்கு வந்தவர் என கூறப்படுகிறது.