தமிழகம்

விருப்பப் பட்டியலிலும் வில்லங்கம் - தவறான பட்டியல் வெளியானதாக காங். கதறல்

செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 26 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்தக் கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையானது பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸுக்கு 28, இந்திய கம்யூ. 5, மதிமுக 4, முஸ்லிம் லீக், மமக கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதர கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மதிமுக சார்பில் மதுரை தெற்கு, திருச்சி கிழக்கு, கோவில்பட்டி, மணப்பாறை, சாத்தூர், பல்லடம், வேளச்சேரி, கிணத்துக்கடவு, பாளையங்கோட்டை, புவனகிரி ஆகிய 10 தொகுதிகள் அடங்கிய பட்டியல் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிலிருந்து 4 தொகுதிகளை திமுக தங்களுக்கு ஒதுக்கும் என எதிர்பார்க்கிறது மதிமுக. இதில் ஒரு தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்திருக்கும் அந்தக் கட்சி அந்தத் தொகுதியில் வைகோவை நிறுத்தலாம் என்றும் தெரிகிறது.

          

இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தங்கள் பங்குக்கு தளி, பவானிசாகர், திருப்பூர் தெற்கு உள்ளிட்ட 15 தொகுதிகள் அடங்கிய விருப்பப்பட்டியலை வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் தரப்பிலும் கிள்ளியூர், நாங்குநேரி, விளவங்கோடு, கோவை தெற்கு, காரைக்குடி, அறந்தாங்கி, தென்காசி, வேளச்சேரி, உதகை என 39 தொகுதிகள் கொண்ட விருப்பப் பட்டியலை திமுக-விடம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்தப் பட்டியல் தவறானது என்றும், அதிகாரபூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் எனவும் காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2021-ல் பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், உதகமண்டலம், காரைக்குடி, சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, நாங்குநேரி, அறந்தாங்கி, விருத்தாசலம், திருவாடானை, வேளச்சேரி, மயிலாடுதுறை, ஊத்தங்கரை (தனி), ஓமலூர், கோவை தெற்கு, மேலூர், கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், உடுமலைப்பேட்டைஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், ஊத்தங்கரை (தனி), ஓமலூர், கோவை தெற்கு, மேலூர், கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், உடுமலைப்பேட்டை தொகுதிகளை தவிர மற்ற 18 தொகுதிகளில் அக்கட்சி வெற்றிபெற்றது.

மதிமுக கடந்த தேர்தலில் மதுராந்தகம் (தனி), அரியலூர், வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, சாத்தூர், பல்லடம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் பல்லடம், மதுராந்தகம் (தனி) தொகுதிகளைத் தவிர மற்ற 4 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த முறை, தளி, பவானிசாகர், திருப்பூர் வடக்கு, சிவகங்கை, வால்பாறை திருத்துறைப்பூண்டி ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிட்டு தளி மற்றும் திருத்துறைப்பூண்டி தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது.

SCROLL FOR NEXT