மதுரை: திருச்சியில் பார்வையற்றோர் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி தலைமையிலான குழு விசரணை நடத்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கமலா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ”எனது மகள் ராஜேஸ்வரி பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி. திருச்சியில் உள்ள பார்வையற்றோர் மாற்றுத் திறனாளிக்கான அரசுப் பள்ளியில் தங்கி படித்து வந்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்கள் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கூறினார்.
12-ம் வகுப்பு என்பதால் இன்னும் சில மாதங்களில் பள்ளி படிப்பு முடிந்து விடும் என கூறி விடுதியில் தங்கி படிக்க அறிவுறுத்தினேன். இந்நிலையில் கடந்த 2025 மார்ச் 9-ம் தேதி காலையில் பள்ளியில் இருந்து எனக்கு போன் வந்தது. அதில் பேசியவர் எனது மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
பின்னர் காவல்துறையிடம் இருந்து எனது மகள் பள்ளி வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது. மகள் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது. இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் முறையாக விசாரணை நடத்தவில்லை. எனது மகள் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
மக்கள் போராட்டம் நடத்தியதால் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், விடுதிக் காப்பாளர் அனிதா ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். எனது மகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியரால் திட்டமிட்ட படுகொலை செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுடிருந்தது.
இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கோகுல் ஆஜராகி, மாணவியின் தாய் கணவனை இழந்து நான்கு குழந்தைகளுடன் வறுமையில் வாழ்கிறார். இதை அறிந்து குற்றவாளிகள் மாணவியை பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்துள்ளனர். எனவே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்கை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் தனி குழு அமைத்து நான்கு வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.