

சென்னை: “சிவகங்கை வரை சென்ற முதல்வர் ஸ்டாலின், தமது ஏவல்துறையின் மூர்க்கத்தனத்தால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் சொல்லாதது ஏன்?. ஏழை எளிய மக்களை பலிகொடுக்கும் திமுகவின் காட்டாட்சி விரட்டியடிக்கப்படும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரத்தம் தோய்ந்த கரங்களுடன் இந்தத் தேர்தலைச் சந்திக்கப் போகும் திமுக. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தையே உலுக்கிய சிவகங்கை மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் மரணம், காவல் மரணம் எனவும், அஜித்குமார் மீது நிகிதா அளித்த புகாரில் உண்மையில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்ற அமர்வில் சிபிஐ இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஒன்றுமே இல்லாத வழக்கில் அப்பாவி ஒருவரைக் காவலர்கள் அநியாயமாக அடித்துக் கொலை செய்துவிட்டனர் என நீதிபதிகள் காட்டம் தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடப்பது மனிதநேயமற்ற கொடுங்கோல் ஆட்சி என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளிக்க வரும் பெண்களிடம் தனிப்பட்ட முறையில் துருவித் துருவி விசாரித்து அவர்களை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கும் திமுகவின் ஏவல்துறை, அஜித்குமார் மீதான புகாருக்கு மட்டும் அதிரடி காட்டியதன் காரணம் என்ன?
புகாரின் பின்னணியையும் உண்மைத் தன்மையையும் முழுதாக ஆராயாமல் கையில் கிடைத்த அப்பாவியைக் கம்பால் அடித்தே கொலை செய்யுமளவிற்குக் காவலர்களின் இதயம் மரத்துப் போய்விட்டதா? மூளை மழுங்கிவிட்டதா? அல்லது மேலிடத்திலிருந்து அத்தனை அழுத்தம் கொடுக்கப்பட்டதா?
சிவகங்கை வரை சென்ற முதல்வர் ஸ்டாலின், தமது ஏவல்துறையின் மூர்க்கத்தனத்தால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் சொல்லாதது ஏன்? - உள்ளிட்ட பல கேள்விகள் மக்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்திற்குமான விடைகள் வரும் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளில் கிடைக்கும். ஏழை எளிய மக்களை பலிகொடுக்கும் திமுகவின் காட்டாட்சி விரட்டியடிக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.