பொது இடங்களில் மரங்களை வெட்டிய 6 பேருக்கு சென்னை மாநகராட்சி ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில் பசுமைப் பரப்பை அதி கரிக்க பல்வேறு வகை மரக்கன்றுகள் நடப்பட்டும், குறுங்காடுகள் உருவாக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் உள்ள மரங்கள், மரக்கிளைகளை அனுமதியின்றி வெட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர் நடவடிக்கையாக, கடந்த ஜன.22-ம் தேதி ஒரு நாளில் மட்டும் பொது இடத்தில் அனுமதியின்றி மரங்களை வெட்டிய நபருக்கு ரூ.1 லட்சம், மரக்கிளைகளை வெட்டிய 5 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரம் என மொத்தம் ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் உள்ள மரங்கள், மரக்கிளைகள், காய்ந்து போன மரங்களை அகற்ற வேண்டி இருந்தால் சென்னை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc என்ற இணைய தளத்தில் பசுமைக் குழு போர்ட்டல் (GREEN COMMITTE APPLICATION) மற்றும் நம்ம சென்னை செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பொது இடங்களில் உள்ள மரங்கள், மரக்கிளைகள் வெட்டப்படுவது தொடர்பான புகார்களை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறை எண் 1913 தொலைபேசி வாயிலாக பொதுமக்கள் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.