சென்னை: கோயம்பேட்டில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை ரயில்வே மற்றும் தனியார் நிறுவன பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில், 342 கழிவுநீரேற்று நிலையங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம், கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.
கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட 3-ம் நிலை எதிர்மறை சவ்வூடு பரவல் முறை (TTRO) சுத்திகரிப்பு நிலையத்தில், அண்ணாநகர், கோடம்பாக்கம், அம்பத்தூர், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்காக சென்னையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள சிப்காட் நிறுவனத்துக்கு சொந்தமான இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், வல்லம் வடகல், பெரும்புதூர் மற்றும் ஒரகடம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு தினசரி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையத்தில், சுத்திகரிக்கப்படும் நீரின் தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்தின் அடிப்படையில் உள்ளதா என, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தார்.
இந்நிலையத்தில், சுத்திகரிக்கப்படும் நீரின் தரம் சரியான அளவில் இருப்பதால், இந்நீரைக் கொண்டு வாகனங்கள் மற்றும் ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்துதல், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள், உணவகங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு வரும் மையப்படுத்தப்பட்ட குளிரூட்டும் அமைப்புகளில் இந்நீரை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும், கட்டுமான பணிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்துவதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். வளாகத்தை தூய்மையாக பராமரிக்குமாறும் அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் மற்றும் 120 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் த.ஆனந்த், பொறியியல் இயக்குநர் உ.பர்வீஸ், தலைமைப் பொறியாளர்கள் ஏ.ராதாகிருஷ்ணன், கு.பா.வைதேகி, மேற்பார்வை பொறியாளர்கள் எஸ்.பி.ஜெயப்பிரகாஷ், கு.ராமமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.