மதுரை: வெளிநாட்டு நிதியுதவிகள் சட்டப்பூர்வமாகவும், வெளிப்படையாகவும், பொறுப்புடனும் பெறப்படுவதையும் பயன்படுத்துவதையும் உறுதி செய்வதே எஃப்சிஆர்ஏ-வின் உண்மையான நோக்கம் என தமிழக பாஜக சிறுபான்மையினர் பிரிவு கூறியுள்ளது.
இது குறித்து தமிழக பாஜக சிறுபான்மையினர் பிரிவு முன்னாள் பொதுச் செயலாளர் கல்வாரி என்.தியாகராஜன் கூறியது: “வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டம் (எஃப்சிஆர்ஏ) குறித்த பாஜகவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. உண்மையான சமூக சேவை நடவடிக்கைகளுக்காகப் பெறப்படும் முறையான வெளிநாட்டு நிதியுதவிகளுக்குத் தாங்கள் எதிரானவர்கள் அல்ல என பாஜக தெளிவுபடுத்தியுள்ளது.
வெளிநாட்டு நிதியுதவிகள் சட்டப்பூர்வமாகவும், வெளிப்படையாகவும், பொறுப்புடனும் பெறப்படுவதையும் பயன்படுத்துவதையும் உறுதி செய்வதே எஃப்சிஆர்ஏ-வின் நோக்கமாகும். கல்வி, சுகாதாரம், அறப்பணிகள், பேரிடர் நிவாரணம் மற்றும் உண்மையான சமூக சேவை நடவடிக்கைகளுக்கான முறையான வெளிநாட்டு நிதியுதவி ஒரு பிரச்சினையாகக் கருதப்படக் கூடாது.
இந்தியாவின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு, பொது நலன் அல்லது சமூக நல்லிணக்கம் ஆகியவற்றிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளிநாட்டு நிதியுதவிகள் பயன்படுத்தப்படக் கூடாது. வெளிநாட்டு நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பயனுள்ள கண்காணிப்பு ஆகியவை அவசியமாகும்.
சட்டத்துக்கு இணங்கி, உண்மையாகச் சமூக சேவை செய்யும் அமைப்புகள் தேவையற்ற தலையீடுகள் இன்றி தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்ள முடிய வேண்டும். தேசிய பாதுகாப்பும் உண்மையான சமூக சேவையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்று பாஜக நம்புகிறது.
சட்டத்தை வெளிப்படையாகவும் பொறுப்புடனும் செயல்படுத்துவதன் மூலம் இவை இரண்டையும் பாதுகாக்க முடியும்,அது அவசியமும் கூட. பாஜக வெளிநாட்டு நிதியுதவிக்கு எதிரானவர்கள் அல்ல. வெளிநாட்டு நிதியுதவி தவறாகப் பயன்படுத்தப்படுவதற்குத்தான் எதிரானவர்கள்” என்று அவர் கூறியுள்ளார்.