சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பால அடித்தளப் பணி முடிவடைந்துள்ளதால், ஏப்.5-ம் தேதி முதல் 10, 11-வது நடைமேடைகளில் வழக்கம்போல புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.735 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பிரம்மாண்ட நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு அடித்தளம் அமைக்கும் பணி காரணமாக, 10, 11-வது நடைமேடைகள் மூடப்பட்டன. இதனால், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் கடந்த பிப்.19-ம் தேதி முதல் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 10, 11-க்கு பதிலாக, 5, 6-வது நடைமேடைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வழக்கமான ரயில் சேவை குறைக்கப்பட்டு, தற்காலிக கால அட்டவணைப்படி, 20 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, இரு மார்க்கத்திலும் எழும்பூர் நோக்கிச் செல்லும்போது ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, எழும்பூர், சென்ட்ரலுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் விரைவு ரயில்களை தவறவிடும் நிலையும் ஏற்படுகிறது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தின் 10, 11-வது நடைமேடைகளில் இருந்து வழக்கமான புறநகர் மின்சார ரயில் சேவை ஏப்.5-ம் தேதி முதல் தொடங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
எழும்பூர் ரயில் நிலையத்தில் 10, 11-வது நடைமேடைகளில் நடை மேம்பால அடித்தளப் பணி முடிந்துள்ளது. எனவே, ஏப்.5-ம் தேதி முதல், 10, 11-ம் நடைமேடைகளில் மின்சார ரயில் சேவை மீண்டும் இயங்க தொடங்கும். நடை மேம்பாலம், நகரும் படிக்கட்டு, குடிநீர் வசதி ஆகியவை உள்ளன. நிழற்குடைகள் பின்னர் அமைக்கப்படும். இதற்கான பணிகள் இரவில் நடைபெறும். சாய்வு பாலம் அடுத்த 15 நாட்களில் அமைக்கப்பட்டுவிடும். பழைய அட்டவணைப்படி மின்சார ரயில் சேவை இயங்கத் தொடங்கும். இதனால், நெரிசல், தாமதமின்றி மக்கள் பயணிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.