தாராபுரம்: தாராபுரம் (தனி) சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்குப் பதிவு மையங்களைக் கண்காணிக்கும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மனிஷ் நாரணவரே மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர் அம்கோத்து ஸ்ரீ ரங்கநாயக் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.
சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றும் ‘குரூப் சி’ நிலைக்குக் குறையாத 384 அலுவலர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயிற்சி வகுப்பில், 320 வாக்குச்சாவடிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள நுண் பார்வையாளர்களுக்கு வாக்குப்பதிவு தொடங்குவது முதல் நிறைவடையும் வரை கவனிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்புப் பணிகள் குறித்து விளக்கப்பட்டது.