தமிழகம்

பாம்பன் பாலம் வழியாக ராமேசுவரத்துக்கு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

கி.தனபாலன்

ராமநாதபுரம்: 2-வது நாளாக ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பாம்பன் பாலம் வழியாக ராமேசுவரத்துக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

டிட்வா புயல் காரணமாக பாம்பன் கடலில் வீசி வரும் சூறைக் காற்றால் ராமேசுவரத்துக்கு 2-வது நாளாக இன்று மதியம் வரை ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. சென்னை - ராமேசுவரம், தாம்பரம் - ராமேசுவரம் உள்ளிட்ட ரயில்கள் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன. ராமேசுவரம் - மதுரை - ராமேசுவரம் பயணிகள் ரயில்கள் உச்சிப்புளி வரையே இயக்கப்பட்டன. வடமாநிலங்களில் இருந்து வரும் சில ரயில்கள் ராமநாதபுரத்திலும், மானாமதுரையிலும் இருந்து இயக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று பாம்பன் பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததால், பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக இன்று காலையில் மண்டபத்தில் இருந்து மின்சார இன்ஜின் மட்டும் பாலத்தில் குறைந்த வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது.

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள உயர் மின்னழுத்த கம்பிகள் சேதம் அடைந்துள்ளதா, இணைப்புகளில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா எனவும், பாம்பன் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள காற்றின் வேகத்தை கண்டறியும் அனிமோ மீட்டர் கருவியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இச்சோதனை ஓட்டத்தின்போது அனைத்தும் முறையாக செயல்பட்டதால் பின்னர் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் இன்றி காலி பெட்டிகளுடன் ரயில் ராமேசுவரத்துக்கு இயக்கி சோதனை செய்யப்பட்டது.

கடல் இயல்பு நிலைக்கு திரும்பி காற்றின் வேகம் குறைந்ததால் ராமேசுவரத்திலிருந்து ரயில்களை இயக்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி மதுரையில் இருந்து ராமேசுவரம் வந்த பயணிகள் ரயில் பாம்பன் பாலம் வழியாக இன்று மாலை ராமேசுவரம் ரயில் நிலையம் வந்தடைந்தது.

தொடர்ந்து ராமேசுவரத்திலிருந்து புறப்படும் ராமேசுவரம்-சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில், ராமேசுவரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில், ராமேசுவரம் - கன்னியாகுமரி விரைவு ரயில், ராமேசுவரம் - மதுரை பயணிகள் ரயில் ஆகியவை ராமேசுவரத்திலிருந்து இயக்கப்பட்டன. அதேபோல் மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு வந்த பயணிகள் ரயில்கள், புவனேஸ்வர் - ராமேசுவரம் விரைவு ரயில் ஆகியவையும் ராமேசுவரம் வரை இயக்கப்பட்டன.

SCROLL FOR NEXT