சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் மெட்ரோ ரயில் சேவை, பூந்தமல்லி - வடபழனி தடத்தில் விரைவில் தொடங்கவுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குபிறகு அமையும் புதிய அரசு, ரயில் சேவையை தொடங்கி வைக்கும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ) ஒன்றாகும்.
இத்தடத்தில் ஒரு பகுதியாக, பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் - வடபழனிவரை 14.64 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்டபாதை அமைக்கப்பட்டுள்ளது. இத்தடத்தில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் மற்றும் அவரது குழுவினர் கடந்த பிப்ரவரியில் ஆய்வு மேற்கொண்டனர்.
ரயில்வே தண்டவாளத்தின் தரம், மெட்ரோ ரயில் நிலையம், பிரேக்கிங் தொழில்நுட்பம், பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்தனர். இதுதவிர, அதிவேக சோதனை ஓட்டம் மேற்கொண்டனர்.
இதன்முடிவில், பூந்தமல்லி முதல் வடபழனி வரை வழித்தடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்தார்.
அதேநேரத்தில், பூந்தமல்லி- போரூர் வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்களை இயக்கவும், போரூர் சந்திப்பு முதல் வடபழனி தடத்தில் ஒவ்வொரு திசையிலும் ஒரு நேரத்தில் 25 கி.மீ. வேகத்தில் இயக்கவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, மார்ச் மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மார்ச் 15-ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படாதநிலை உருவானது.
தற்போது சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) நடைபெறவுள்ளது. இதையடுத்து இன்னும் ஒரு வார காலத்தில் புதிய அரசு பதவியேற்கவுள்ளது.
இந்நிலையில், பூந்தமல்லி முதல் வடபழனி வரையில் மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ளது. ரயில் சேவை தொடங்கும்போது, பூந்தமல்லி - போரூர் வரை அனைத்து நிலையங்களில் நின்று செல்லும்.
போரூர் முதல் வடபழனி வரை இடையில் உள்ள நிலையங்களில் நிறுத்தப்படாது. பூந்தமல்லி முதல் வடபழனி வரை ரயில் இயக்கப்படவுள்ளதால், வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் இறங்கி, சென்ட்ரல் - பரங்கிமலை (பச்சை நிற வழித்தடம்) வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் ஏறி, விரும்பிய இடத்துக்கு பயணிக்க இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி - வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்க தயாராக உள்ளது.
புதிய அரசு அமைந்தவுடன், இத்தடத்தில் ரயில் சேவையை தொடங்கி வைக்கும். இத்தடத்தில் முக்கிய நிலையங்களான போரூர், வடபழனி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் தயாராக இருக்கின்றன.
போரூர் - வடபழனி தடத்தில் ஆலப்பாக்கம், வளரசவாக்கம் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகின்றன. இதுபோல, இத்தடத்தில் மற்ற ரயில் நிலையங்களில் கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இந்த நிலையங்களில் கட்டுமானப்பணிகளை முடித்து, படிப்படியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.