சென்னை: கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தை (மேம்பால ரயில்) பரங்கிமலை வரை 5 கி.மீ.தொலைவுக்கு நீட்டிக்கும் பணி 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்தது. இத்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக் குமார் கர்க் மார்ச் 5-ம் தேதி ஆய்வு செய்தார்.
ஏசி மின்சார ரயில் மூலமாக அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இச்சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனவே, மார்ச் 10 முதல் திட்டமிட்டபடி, மின்சார ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தொழில்நுட்ப ரீதியாக சில பணிகளை முடிக்க ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் தெரிவித்திருந்ததால், ரயில் சேவை தொடங்குவது தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழித்தடத்தில் புறநகர் ரயில் இயக்குவதற்கான தற்காலிக பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் வழங்கியுள்ளார்.
தெற்கு ரயில்வே உதவி துணை பொது மேலாளர் செழியனை புழுதிவாக்கம் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் என்.பாபு, துணைத் தலைவர் வேணுகோபால், இணை பொதுச் செயலாளர் கண்ணன் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்.
இதையடுத்து இன்றுமுதல் வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே தற்போது 86 ரயில் சேவைகள் உள்ள நிலையில் இவை பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டு, கடற்கரை - பரங்கிமலை இடையே 86 ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.
மேலும் கடற்கரை, பரங்கிமலையிலிருந்து முதல் ரயில் காலை 5 மணிக்கும், கடைசி ரயில் 10.20 மணிக்கும் இயக்கப்படும். ஆதம்பாக்கத்தில் நிற்காது வேளச்சேரி-பரங்கிமலை இடையே புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ரயில் நிலையங்கள் இருக்கும் நிலையில் ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் சில பணிகள் காரணமாக ஒரு வாரத்துக்கு ரயில்கள் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதற்கு உள்ளகரம் - புழுதிவாக்கம் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் என்.பாபு, துணைத் தலைவர் வேணுகோபால், இணை பொதுச்செயலாளர் கண்ணன் ஆகியோர் தெற்கு ரயில்வே உதவி துணை பொது மேலாளர் செழியனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மேலும் ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் ரயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தனர்.