சென்னை: நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு நேற்று அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, கி.மீ.க்கு 1 முதல் 2 பைசா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரயில் கட்டணம் டிசம்பர் 26-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக ரயில்வே கடந்த 21-ம் தேதி அறிவித்தது. அதன்படி, 215 கி.மீ. தூரத்துக்கும் குறைவான சாதாரண வகுப்பில் பயணம் செய்வதற்கான கட்டணத்தில் எவ்வித உயர்வும் இல்லை. 215 கி.மீ. தூரத்துக்கு மேல் இயக்கப்படும் ரயில்களில் சாதாரண வகுப்புக்கு ஒரு கி.மீ.க்கு ஒரு பைசாவும், விரைவு மற்றும் ஏசி வகுப்புக்கு ஒரு கி.மீ.க்கு 2 பைசாவும் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. புறநகர் மின்சார ரயில் கட்டணம், மாதாந்திர சீசன் கட்டணம் ஆகியவை உயர்த்தப்படவில்லை.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, வந்தே பாரத், மெயில், விரைவு ரயில்கள், சதாப்தி, ராஜ்தானி, தேஜஸ் உள்ளிட்ட அனைத்து விரைவு, அதிவிரைவு ரயில்களிலும் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. 215 கி.மீ.க்கு அதிகமாக உள்ள முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஒரு கி.மீ.க்கு ஒரு பைசாவும், விரைவு ரயிலில் தூங்கும் வசதிகொண்ட 2-ம் வகுப்பு பெட்டி மற்றும் ஏசி பெட்டிக்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டது. அதன்படி, ரூ.5 முதல் ரூ.45 வரை கட்டணம்உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு புதிய கட்டணம் பொருந்தும். ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்று ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வால், ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து டிஆர்இயு தொழிற்சங்க முன்னாள் தலைவர் மனோகரன் கூறியதாவது: 2-ம் வகுப்பு சாதாரண கட்டண பயணிகள் ரயில்களில் 751 கி.மீ. தூரத்தில் இருந்து 1,250 கி.மீ. தூரம் வரை கட்டண உயர்வு ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 100 கி.மீ. தூரத்துக்கு ரூ.1 கட்டண உயர்வு என அறிவித்தாலும், கட்டண நிர்ணயம் அவ்வாறு இல்லை. 851 கி.மீ. தூரம் பயணம் செய்தால் கூடுதல் கட்டணம் ரூ.6-க்கு பதிலாக ரூ.10 ஆக உள்ளது. ரூ.5, ரூ.10, ரூ.15 என்ற அளவுகோலில் கட்டணம் உயர்த்தப்படுவதால், மறைமுக கட்டண உயர்வாக உள்ளது.
இத்தகைய ரயில்வே கட்டண நிர்ணய முறையால் ரயில்வேக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.600 கோடி கிடைக்கும். வந்தே பாரத் தனி கட்டண முறையில் இருந்தாலும், வழக்கமான கட்டண உயர்வுக்குக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வருவாய் ஈட்டும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏசி வகுப்புகளுக்கு ஜிஎஸ்டியும் வசூலிப்பதால் கூடுதலாக ஜிஎஸ்டி வருவாயும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.