

சென்னை: சட்டப்பேரவையின் 2026-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜன.20-ம் தேதிதொடங்க உள்ளது. முதல்வர், அமைச்சர்களால் தயாரித்து அளிக்கப்படும் ஆளுநர் உரையை பேரவையில் ஆளுநர் அன்றைய தினம் வாசிப்பார் என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரியில் தொடங்கும். அந்த வகையில், வரும் 2026-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரியில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று கூறியதாவது: இந்திய அரசியமைப்புச் சட்டத்தின்படி, வரும் 2026-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரை சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள பேரவைக் கூட்ட அரங்கில் ஜனவரி 20-ம் தேதி காலை 9.30 மணிக்கு கூட்டுவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களால் தயாரித்து அளிக்கப்படும் ஆளுநர் உரையை ஆளுநர் அன்றைய தினமே பேரவைக்கு வாசித்து அளிப்பார். அன்று அலுவல் ஆய்வுக் குழு கூடி,எத்தனை நாட்கள் பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று முடிவெடுக்கப்படும். தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக ஏற்கெனவே உள்ள மரபு பின்பற்றப்படும். சட்டப்பேரவையின் மாண்பை ஆளுநர் நிச்சயம் காப்பாற்றுவார் என நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2026-ல் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில், தற்போதைய திமுக அரசு வரும் ஆண்டில், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் முடிந்து பொறுப்பேற்கும் புதிய அரசு 2026-27-ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். எனவே, பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்தும் ஜன.20-ம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.