தமிழகம்

போக்குவரத்து விதிமீறல் அபராத விவரம் தெரிவிக்க சென்னையில் 15 இடங்களில் கால்சென்டர் அமைப்பு

போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை பொதுமக்கள் செலுத்த வைப்பதற்கு, நினைவூட்டும் வகையில் சென்னையில் தற்காலிகமாக ‘கால்சென்டர்கள்’ அமைக்கப்படுகின்றன. இந்த ‘கால்சென்டர்கள்’ செப்டம்பர் 21 முதல் 30-ம் தேதி வரை செயல்படும் என்று சென்னை போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு அவர்களது வாகனங்களின் விதிமீறல்களுக்கான இ-சலான் அபராதம், தற்போது ஏஎன்பிஆர் கேமராக்கள், டிராஸ் அமைப்பு மூலம் விதிக்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்த விழிப்புணர்வு சிலரிடம் இல்லை. அத்துடன், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறையிலிருந்து அனுப்பப்படும் இணையதள இணைப்பை (link) சைபர் மோசடி கும்பல் அனுப்பியிருக்கலாம் என்று கருதுவதாலும், மக்கள் அந்த இணைப்பை தொடுவதற்கு தயங்குகின்றனர்.

இதை கருத்தில்கொண்டு இந்த கால்சென்டர்கள் அமைக்கப்படுகின்றன. இந்த கால்சென்டர்கள் சென்னை கிழக்கு மண்டலத்தில் அயனாவரம், ராயப்பேட்டை, அபிராமபுரம் ஆகிய காவல் நிலையங்களிலும், ராயப்பேட்டை மணிக்கூண்டு சந்திப்பு காவல் உதவி மையத்திலும் அமைக்கப்படுகின்றன.

மேற்கு மண்டலத்தில் அண்ணாநகர் ரவுண்டானா போக்குவரத்து காவல் உதவி மையம், அண்ணா வளைவு போக்குவரத்து காவல் உதவி மையம், மதுரவாயல் காவல் நிலையம், மாதவரம் போக்குவரத்து காவல் நிலையம், வடக்கு மண்டலத்தில் யானைகவுனி காவல் நிலையம், புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையம், செம்பியம் காவல் நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்படுகின்றன.

தெற்கு மண்டலத்தில் மாம்பலம் காவல் நிலையம், அடையார் காவல் நிலையம், கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ், வேப்பேரியில் சென்னை பெருநகர காவல் ஆணையரகம் ஆகிய 15 இடங்களில் கால்சென்டர்கள் அமைக்கப்படுகின்றன. இந்த கால்சென்டர்கள் செப்டம்பர் 21-ல் இருந்து 30-ம் தேதி வரை தினமும் காலை 9 முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

இந்த கால்சென்டர்கள் மூலம் வாகன ஓட்டிகளை செல்போன் அல்லது தொலைபேசி யில் தொடர்புகொண்டு, நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமுறை மீறல் அபராதம் (E-challans) குறித்து தகவல் தெரிவிக்கப்படும், நிலுவையில் உள்ள அபராதம் குறித்த தகவல்களை வாகன ஓட்டிகளுக்கு மொத்தமாக குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பப்படும்.

வாகன ஓட்டிகள், நிலுவையில் உள்ள அபராத தொகையை, https:// echallan.parivahan.nic.in, NextGen e-Challan,Paytm App ஆகிய ஆன்லைன் இணையதளம், செல்போன் செயலி மூலமாக செலுத்தலாம். இல்லையெனில் அஞ்சல் நிலையங்கள், இ-சேவை மையங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றில் செலுத்தலாம்.

எனவே வாகன ஓட்டிகள், நிலுவையில் உள்ள அபராத விவரங்களைச் சரிபார்த்து, ஒரு வாரத்துக்குள் அபராதத்தை செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். போக்குவரத்து விதிமுறை மீறலில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதோடு, ஓட்டுநர் உரிமம் தாற்காலிக ரத்து செய்தல் அல்லது நிரந்தரமாக ரத்து செய்தல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT