சென்னை: பங்குனி பெருவிழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 1-ம் தேதி வரை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வரும் 29-ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டமும், அடுத்த நாளான 30-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு அறுபத்து மூவர் உற்சவமும் நடைபெறுகிறது.
அடுத்த மாதம் 1-ம் தேதி வரை பல்வேறு விழாக்கள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன. இவ்விழாக்களை முன்னிட்டு ஒவ்வொரு உற்சவமும் தொடங்கும் நேரம் முதல் நிறைவடையும் வரை பக்தர்களின் வருகை எண்ணிக்கைக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.
குறிப்பாக, கபாலீஸ்வரர் கோயிலை சுற்றியும், அதன் போக்குவரத்து வழித்தடங்களிலும் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட உள்ளது.
மேலும், கோயில் அருகே பக்தர்களின் வசதிக்காக வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.