

சென்னை: 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மேற்கு மண்டல காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த, 13-வயது சிறுமியின் தாய் ஒருவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், “எனது மகளிடம், உறவினரான கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பரத் (30) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக குற்றச்சாட்டுக்கு உள்ளான பரத்தை காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர்.
இதில் அவர் திமுகவில் நிர்வாகியாக இருப்பதும், அவர் உறவினர் மகளான சிறுமியிடம் தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து பரத்தை கைது செய்தனர்.
கட்சிகள் கண்டனம்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: ஆட்சி அதிகாரம் கையிலிருக்கும் மமதையில் தான்தோன்றித்தனமாகத் திரியும் தமது சொந்தக் கட்சிக்காரர்களிடம் இருந்து பெண்களைப் பாதுகாக்க முடியாத முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்ற குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தி தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை எப்படி சீராக்குவார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் நிம்மதியாக வெளியே தலைகாட்ட முடியுமா?
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: பாலியல் வழக்கில் திமுக நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் பாதுகாப்பிலும், பெண்கள் அதிகளவு வேலைக்குச் செல்வதிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமான தமிழகம், கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறும் மாநிலங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், குறிப்பாக, சிறு குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களைச் செய்பவர்கள், பெரும்பாலும் திமுகவைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது, திமுக அரசு, தங்கள் மீது நடவடிக்கை எடுக்காது என்ற ஒரே தைரியத்தில்தான். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.