ராஜபாளையத்தில் கொத்தலு பண்டிகைக்காக சாமைக் கதிர்களை எடுத்துச் சென்ற ராஜுக்கள் சமூகத்தினர்.
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராஜுக்கள் சமூகம் சார்பில் பாரம்பரிய கொத்தலு திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
விவசாயம் செழிக்கவும், சண்டை, சச்சரவுகளை மறந்து உறவுகளைப் புதுப்பிக்கும் நோக்கிலும், சாமைக்கதிர் விளையும் காலத்தில் கொத்தலு என்ற புதியல் விழா ராஜபாளையம் ராஜுக்கள் சமூகம் சார்பில் பாரம்பரியமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
ஊர் மக்கள் சார்பில் சாமைக்கதிர்களை அறுவடை செய்து,ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்குவார்கள். அந்தக் கதிர்களை வீட்டில் வைத்து பூஜித்து, மாவிளக்கு, கொழுக்கட்டை, பானகம் வைத்து வழிபட்டு, வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கு வழங்குவர்.
காலப்போக்கில் இக்கொண்டாட்டம் மறைந்து சம்பிரதாயமாக நடந்து வந்தது. நீண்ட காலத்துக்குப் பின்னர் நடப்பாண்டு இப்பண்டிகையை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சியாக ஊர்த் தலைவர்கள் ஒன்று கூடி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஒரு ஏக்கர் பரப்பில் சாமைப் பயிர் சாகுபடி செய்து, அறுவடை செய்து, சிறு சிறு கட்டுகளாக ராஜபாளையம் கொண்டு வந்தனர்.
பின்னர், சக்கராஜா கோட்டை, சிங்கராஜா கோட்டை, பழைய பாளையம், திருவனந்தபுரம் ஆகிய 4 கோட்டை சாவடிகளில் இருந்து நேற்று காலை சாமைக் கதிர் கட்டுகளை தலையில் வைத்து ஊர்வலமாக வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
வீட்டில் வைத்து பூஜை செய்த பின்னர், உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று அவற்றை வழங்கி மகிழ்ந்தனர்.ராஜபாளையத்தில் கொத்தலு பண்டிகைக்காக சாமைக் கதிர்களை எடுத்துச் சென்ற ராஜுக்கள் சமூகத்தினர்.