சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய பட்ஜெட்டுக்கான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும், அரசு வருவாய் அதிகரிப்புக்கான சாத்திய கூறுகளையும் பேரமைப்பு சார்பில் நிதியமைச்சகத்துக்கு முன்னரே சமர்ப்பித்திருந்தோம்.
அந்த ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பது வருத்தத்துக்குரியது. மேலும், தொழில் வணிகர்களுக்கான வணிகர்களின் நலன் காக்கின்ற எந்த ஒரு செய்தியும் பட்ஜெட்டில் இடம் பெறாதது, மேலும் வருத்தம் அளிக்கிறது.
வணிகர்களின் தொடர் கோரிக்கைகளான அரசு ஊழியர்களுக்கு இணையான அதிகார பகிர்வின் மூலம், அரசின் பயன்கள் வணிகர்களுக்கு அளிக்கப்பட வேண்டியது கட்டாயம் என்பதை மத்திய, மாநில அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும்.
வரியை வசூலிக்கின்ற பணியையும், அரசு கருவூலத்திற்கான வரியை தாங்களே செலுத்துகின்ற இருவழி பாதையாக இருக்கின்ற வணிகர்களை பாதுகாக்கின்ற பட்ஜெட்டாக இல்லை. ஒட்டுமொத்தமாக மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்த பட்ஜெட். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.