யானைகள் நடமாட்டம்
கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் திங்கட்கிழமை (இன்று) காலை முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றே சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும். பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ண்ட், அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களை பார்க்கலாம்.
இந்நிலையில் நேற்று (மார்ச் 22) பிற்பகல் முதல் பேரிஜம் ஏரி பகுதியில் யானை நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்கு திங்கட்கிழமை (இன்று) காலை முதல் மறு அறிவிப்பு வரும் வரை வனத்துறை தடை விதித்துள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யானை இடம் பெயர்ந்து வனப்பகுதிக்குள் சென்றதும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்’ என்றனர்.