தமிழகம்

ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி பயிற்சி: திருச்சியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

எம்.கே.விஜயகோபால்

சென்னை: ஆசிரியர்களுக்கான தேர்தல் பணி பயிற்சி வகுப்புகள் காரணமாக, திருச்சியில் நாளை அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப் பிரியா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: ”திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை (ஏப்.15) சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் செல்லவிருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சித் தலைவருமான வே.சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.

எனவே, திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

மேலும், ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்வதால் மைய மதிப்பீட்டு பணிகளுக்கும் நாளை முகாம் விடுமுறை என அறிவிக்க சார்ந்த முகாம் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் பணி ஆணை பெற்ற அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் உரிய நேரத்தில் தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.” என்று கிருஷ்ணப் பரியா கூறியுள்ளார்.

          
SCROLL FOR NEXT