கோப்புப் படம்

 
தமிழகம்

தேனி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மு.வேல்சங்கர்

சென்னை: தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் நாளை (நவ.6) கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, நாளை (நவ.6) தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை (நவ.6) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.7-ம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.8-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 19 மாவட்டங்களில் அநேக இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.9-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆரிய 10 மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.10, 11 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.6-ம் தேதி முதல் நவ.10-ம் தேதி ஏனைய தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று மற்றும் நாளை (நவ.5, 6) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழைப் பொழிவு: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT