சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் டிடிவி. தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் இதில் கலந்துகொள்கின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி மாற்றங்கள், வியூகங்கள் என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், அதிமுக, பாஜகவுடன் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் விதமாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறு கிறது. பிரதமர் மோடி இதில் பங்கேற்று உரையாற்றுவது கூட்டணிக் கட்சியினரிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி கட்சி தலைவர்கள்: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் டிடிவி. தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
மதியம் 2.15 மணிக்கு வருகை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் மோடி இன்று மதியம் 2.15 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர்கள் அவரை வரவேற்கின்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு பிரதமர் செல்கிறார். மதியம் 3.10 மணிக்கு பொதுக்கூட்ட மேடை ஏறுகிறார்.
அதைத் தொடர்ந்து, மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து, பழனிசாமி, அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் பேசுகின்றனர். இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்று கிறார். பின்னர், மாலை 4.15 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு: பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரை நிகழ்த்தும் முன்பாக, இன்னிசைக் கச்சேரி, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்புடன் காவல் துறையின் முழுமை யான கட்டுப்பாட்டில் உள்ளது. பாதுகாப்பு பணியில் 15,000 போலீ ஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.