சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாளாகும். வாக்காளர் பட்டியலில் இருந்து நிரந்தரமாக குடிபெயர்ந்ததாக 66 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில், கடந்த 16-ம் தேதி வரை 12.80 லட்சம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை எஸ்ஐஆர் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த டிச.19-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 லட்சம் பேர், முகவரியில்இல்லாதவர்கள் 66.44 லட்சம்பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ளவர்கள் 3.98 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்துகடந்த டிச.19-ம் தேதி முதலேவாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் புதிதாக பெயர் சேர்க்கவும் ஏற்கெனவே நீக்கப்படாதவர்கள் பெயரை நீக்கவும் கடந்த ஜன.1-ம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் படிவங்கள் பெறப்பட்டன. மேலும் ஆன்லைன் மூலமும் பலர் விண்ணப்பித்தனர்.
இதன் ஒருபகுதியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தாலும், எஸ்ஐஆர் படிவங்களை முறையாக பூர்த்தி செய்யாதவர்கள் 12 லட்சம் பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பான அறிவிப்புகள் பிப்.10-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மற்றும் படிவங்களை முறையாக பூர்த்தி செய்யாதவர்களிடம் விசாரணை நடத்தும் பணிகளை துரிப்படுத்தவும், ஏற்கெனவே உள்ள அலுவலர்களுக்கு வேலைப்பளுவை குறைக்கவும் 234 தொகுதிகளுக்கும் கூடுதலாக உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாக, சிறப்பு வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க வும் பெயர் சேர்க்க ஏதுவாகவும் கடந்த வார விடுமுறை நாட்களான டிச.27, 28, ஜன. 3, 4, 10, 11 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17-ம் தேதி வெளியிடப்படும். வாக்காளர்பட்டியலில் இருந்து நிரந்தரமாக குடிபெயர்ந்ததாக 66 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில், கடந்த 16-ம் தேதி வரை 12.80 லட்சம் பேர் மட்டுமே பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.