விருதுநகர்: “தமிழகத்தின் இன்றைய சி.எம்.... வருங்கால பி.எம்... அதை நோக்கி பயணிப்போம்” என்று சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசினார்.
விருதுநகர் மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் விருதுநகர் அருகே ஆமத்தூரில் உள்ள ஏஏஏ பொறியியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது.
150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று பல்வேறு பணிகளுக்கு ஆள்தேர்வு செய்தனர். இந்த முகாமில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர். இந்த முகாமில் பல்வேறு நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி ஆணைகள் வழங்கும் விழா பிற்பகலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமை வகித்தார். விருதுநகர் எம்.எல்.ஏ. செல்வம் முன்னிலை வகித்தார். தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, சமூக நலத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுகையில், “தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி கொடுப்பேன் என்று தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். வேலைக்காக யாருக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்கக் கூடாது. வேலைக்கான தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள். அதற்காக நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும்.
ஊழல் இல்லாத ஆட்சிக்கு மக்கள் ஒத்துழைப்புகொடுக்க வேண்டும். ஏதாவது ஒரு தீய சக்தி மூலம் பணம் கேட்டால், கேட்பார்கள். நமது ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை. சிறார் பள்ளி மாணவர்களின் வாழ்க்கை மேம்பட அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தொழில் தொடங்க உதவியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை முதல்வரிடம் பரிந்துரைப்பேன்.
இதுவரை 323 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5.93 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். 13,434 நிறுவனங்களில் 58 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் நல்வழியில் சென்று ஊழல் இல்லாத ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தமிழகத்தின் இன்றைய சி.எம்... வருங்கால பி.எம்... அதை நோக்கி பயணிப்போம்” என்று கூறினார்.
அமைச்சர் கீர்த்தனா பேசுகையில், “தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 3 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடிக்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. இங்கு உள்ள பி.எம். மித்ரா தொழில் பூங்காவில் ரூ.1,600 கோடியில் 2 பெரிய நிறுவனங்கள் வர உள்ளன. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
வெற்றி தமிழ்நாடு என்ற திட்டம் மூலம் இளைஞர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் பணி வாய்ப்பு இல்லாமல், உயர்ந்த ஊதியத்தில் பணி வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் வேலைதேடுவோராக இல்லாமல் வேலை கொடுப்பவராக உருவாக வேண்டும்” என்றார்.