தாராபுரம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. அதனை பார்வையிட்ட தேர்தல் காண்காணிப்பு அலுவலர்கள்.
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (6-ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாக்குகள் வரும் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தனித்தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணையை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தேர்தல் ஆணை
யம் வெளியிட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9-ல் தொடங்கி 16-ம் தேதியுடன் முடிவடைந்தது. மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத்(அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகிராமன் (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சைகள் உட்பட 27 பேர் களத்தில் உள்ளனர். அதேபோல், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா(தவெக), சுகன்யா(திமுக), பானுமதி (அதிமுக), லட்சுமணன் (சிபிஐ), கார்த்திகா(நாதக) உட்பட 22 பேர் போட்டியிடுகின்றனர்.
தவெக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் விஜய் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தலா 2 நாட்கள் பிரச்சாரம் செய்தார். திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோரும், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியும் பிரச்சாரம் செய்தனர்.
கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு அக்கட்சிகளின் மாநில நிர்வாகிகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களுக்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இரு தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
இந்த தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட்கள் என 5 முனை போட்டி நிலவுகிறது. எனினும், தவெக, அதிமுக, திமுக ஆகிய 3 பிரதான கட்சிகளுக்கு இத்தேர்தலானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் அக்டோபர் 4-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(6-ம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி இரு தொகுதிகள் முழுவதும் துணை ராணுவத்தின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொகுதிகளில் உள்ள வெளியாட்கள் முழுவதுமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இரு தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விரு தொகுதிகளிலும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நேற்று வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் அடங்கிய தாள்கள் பொருத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரணங்கள், வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில், படாளம், மேலவலம் உட்பட60 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. தாராபுரம் தொகுதியில் மொத்தமுள்ள 320 வாக்குச்சாவடிகளில் 18 பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இருதொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன. இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு முன்பாக கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். வாக்காளர்கள் அரசு ஆவணங்களுடன் வாக்களிக்கலாம்.
வாக்குப்பதிவை முன்னிட்டு மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் இன்று பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ளது.
தட்டாஞ்சாவடி தொகுதியிலும்... புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மங்கலம், தட்டாஞ்சாவடி என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் இன்று (6-ம் தேதி) நடைபெறுகிறது. தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் 6 பேரும், சுயேச்சைகளாக 5 பேரும் மொத்தமாக 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
எந்தெந்த ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்? - வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் கார்டு, வங்கி அல்லது அஞ்சல் கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம், பணியாளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உட்பட 12 ஆவணங்களை பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.